×

மழையால் பூக்கள் அழுகத்தொடங்கின செவ்வந்தி விளைந்தும் விலையில்லை: மானூர் பகுதி விவசாயிகள் கவலை

நெல்லை: மானூர் சுற்று வட்டார பகுதியில் செவ்வந்தி பூக்கள் விளைச்சல் அதிகரித்திருந்தாலும், போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள்  வேதனை அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் மானூர், ரஸ்தா, அழகியபாண்டியபுரம் மற்றும் தேவர்குளம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வந்தி, சாமந்தி, கேந்தி, மல்லிகை,  முல்லை, ஜாதிப்பூ, கனகாம்பரம், செண்டுமல்லி, சம்பங்கி, ரோஜா, கோழிக்கொண்டை உள்ளிட்ட பல்வேறு பூக்கள் அந்தந்த பருவத்திற்கு ஏற்ப  பயிரிடப்படுகிறது. தற்போது பல பகுதிகளிலும் செவ்வந்திப்பூ விவசாயம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மார்கழி மற்றும் ஐயப்பன் கோயில்  சீசனுக்காக கடந்த ஆவணி மாதம் நாற்றுக்களாக விதைத்துள்ளனர்.

செவ்வந்தி சிறிய அளவிலான கன்றுகள் ஓசூர் மற்றும் பெங்களூர் பகுதியிலிருந்து ரூ.3 முதல் ரூ.4 வரையில் வாங்கப்படுகிறது. அரை ஏக்கர்  நிலத்திற்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்றுகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த கன்றுகள் செடிகளாக வளர்ந்து பூக்களை பறிப்பதற்கு 4 மாத காலங்கள்  விவசாயிகள் காத்திருக்க வேண்டும். இந்த 4 மாதங்களில் அவ்வப்போது களை எடுப்பது மற்றும் பூ செடிகளை நோய்கள் தாக்காமல் இருப்பதற்கு  வாரத்தில் ஒருமுறை மருந்து தெளிக்க வேண்டும்.தற்போது இவற்றை பறித்து விற்பனைக்கு அனுப்பும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதிக பனியினால் மல்லிகை உள்ளிட்ட பல பூக்களின்  வளர்ச்சி பாதித்த நிலையில் செவ்வந்தி அதிகளவில் விளைந்ததால் விவசாயிகளுக்கு சில நாட்களில் மட்டும் ஓரளவு விலை கிடைத்து வருகிறது.

இதுகுறித்து மானூரைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ஓசூர், பெங்களூரிலிருந்து ஒட்டு ரக கன்றுகளை வாங்கி நடவு செய்தோம். ஒரு நாற்றில்  அதிக சிம்புகள் முளைத்து பூக்கும். அதிக பனி போன்றவற்றினால் மல்லிகை விளைச்சல் பாதித்துள்ளது. ஆனால் இந்த பருவத்தை எதிர்கொண்டு  செவ்வந்தி நன்கு விளைந்துள்ளது. தற்போது சீசன் நேரம் என்பதால் மார்க்கெட்டில் கிலோ ரூ.120 முதல் விற்பனை ஆகிறது.செடியில் இப்பூவை கவனமாக வெட்டி எடுக்க வேண்டும். எனவே வேலையாட்களுக்குப் பதிலாக பெரும்பாலும் குடும்பத்தில் உள்ளவர்களே கதிர்  அரிவாள் மூலம் பூப்பறிப்போம். செடி அதிகம் அதிர்ந்தால் மொட்டுக்களும், மலர வேண்டிய பூக்களும் உதிர்ந்து விடும். இதனால் பொறுமையாக  வேலை செய்ய வேண்டும். கடந்த சீசனில் ெகாரோனா உள்ளிட்ட பிரச்னையால் பூக்களை சந்தைப் படுத்துவதில் சிரமம் இருந்தது. தற்போது  விற்பனை நன்றாக உள்ளது. தொடர்ந்து 2 மாதம் வரை மகசூல் இருக்கும். ஆனால் எங்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என்றனர்.

இதுகுறித்து நெல்லை பூ வியாபாரிகள் கூறுகையில், கூடுதல் பனியினால் மல்லிகைப்பூ வரத்து முற்றிலும் குறைந்து விட்டது. இதனால் கிலோ ரூ.2  ஆயிரத்திற்கும் மேல் சென்று விட்டது. பெரும்பாலான பூக்களின் வரத்து குறைந்துள்ள நிலையில் செவ்வந்தியே தற்போது அதிகளவில் வந்து  கொண்டிருக்கிறது. முன்பு மஞ்சள், வெள்ளை நிற செவ்வந்திகளே இருந்த நிலையில் தற்போது ஊதா, சிவப்பு, ஆரஞ்சு என்று பல வண்ணங்களில்  விளைவிக்கப் படுகிறது. வாடிக்கையாளர்களும் இதனை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

1 கிலோ பூ ரூ.60 வரையிலும் விலை வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அதேவேளையில் பூக்கள் மார்க்கெட்டில் ரூ.120 என  விற்கப்படுகிறது. சில நேரங்களில் பூ வரத்து அதிகமானால் விலை கிலோவிற்கு ரூ.10 என சரிந்துவிடும். இதனால் வேறு வழியின்றி பூக்களை  மார்க்கெட்டில் கீழே கொட்டி விட்டு வெறுங்கையுடன் வீட்டிற்கு திரும்பி விடுவோம். இவ்வாறு தெரிவித்தனர்.பூக்களை பயிரிடும் விவசாயிகள் நிலை ஓகோ என்று இல்லை. நிலத்ைத தரிசாக விட்டுவிடாமல் இருப்பதற்காக குறைந்த முதலீட்டில் பூக்களை  பயிரிட்டு வருகின்றனர். பூ விவசாயிகள் பாதிக்கப்படும்போது அரசு இழப்பீடு தொகை வழங்கினால் உதவிகரமாக இருக்கும் என்பது பூ  விவசாயிகளின்  எதிர்பார்ப்பு.

Tags : Manor area farmers , By rain The flowers are rotten and the amethyst yields are priceless: Manor Area Farmers Anxiety
× RELATED 144 தடை உத்தரவால் விற்பனையில்லாமல்...