×

நெல்லையில் இறந்த பறவைகளின் மாதிரி எடுத்து பரிசோதனை : கால்நடை துறை அதிகாரிகள் ஆய்வு

நெல்லை: பாளை செந்தில்நகர் பகுதியில் வெட்டுவான்குளத்திற்கான ஓடை செல்லும் வழியில்  சுகாதார சீர்கேடுகள் காணப்பட்டன. அப்பகுதியில்  20க்கும் மேற்பட்ட பன்றிகள் வளர்க்கப்பட்டு வரும் சூழலில், கோழிகள், காகங்கள் உள்ளிட்ட பறவைகள் திடீரென இறந்து கிடந்தன. பறவை காய்ச்சல்  பரவி வரும் நிலையில் பறவைகள் செத்து மடிவதற்கான காரணம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.இந்நிலையில் நெல்லை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் முகம்மது காலித் அறிவுறுத்தலின் பேரில், கால்நடை நோய்  புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் ஜான் சுபாஷ், கால்நடை மருத்துவர் பாபு மற்றும் உதவி மருத்துவர் பொன்மணி ஆகியோர் அடங்கிய குழு  செந்தில்நகர் பகுதியில் முழுமையாக ஆய்வு நடத்தியது. அங்கு கோழிகள் வளர்க்கும் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.

அத்தெருவில் உள்ள பொதுமக்களை அழைத்து கோழி, சேவல் மற்றும் வளர்ப்பு பறவைகளுக்கு ஏதேனும் நோய் உள்ளதா என விசாரணை நடத்தினர்.  இறந்த கோழியின் மாதிரி எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘நெல்லையில் பறவை  காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. மழைக்காலம் என்பதால் ஆடு, மாடுகள் மற்றும் கோழிகளை சில நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.  அதற்கும் பறவை காய்ச்சலுக்கும் தொடர்பில்லை.
இருப்பினும் ஏதாவது ஒரிடத்தில் பறவைகள் இறப்பு தென்பட்டால் உடனடியாக கால்நடைத்துறையை தொடர்பு கொள்ள பொதுமக்களை கேட்டுக்  கொண்டு வருகிறோம்’’ என்றனர். மேலும் பறவைகள் இறந்த பாளை செந்தில்நகர் பகுதியில் ஒருவாரம் தொடர் கண்காணிப்பு நடத்தப்பட உள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : paddy fields ,Inspection ,department officials , Of dead birds in the field Sample taking and testing : Inspection by Veterinary Department officials
× RELATED நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை