திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலத்தில் மழையால் பாதித்த பயிர்களை ஆய்வு: உரிய இழப்பீடு வழங்கப்படும் என கலெக்டர் உறுதி

திருவாடானை: தினகரன் செய்தி எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கலெக்டர் நேற்று ஆய்வு  செய்தார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் அறுவடைக்கு தயாராக  இருந்த நெற்கதிர்கள் கீழே சாய்ந்து தண்ணீரில் மூழ்கிவிட்டன. தண்ணீரை வெளியேற்ற வழி இல்லாததால் நெல் கதிர்கள் அனைத்தும் மீண்டும்  முளைக்க தொடங்கிவிட்டன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். எனவே அரசு முழு இழப்பீடு வழங்க வேண்டும் என  விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இது குறித்து தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று திருவாடானை ஆதியூர், மல்லிகுடி, கடம்பகுடி உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட பயிர்களை நேரடியாக ஆய்வு  செய்தார்.  

இதேபோல் தொண்டியில் அச்சங்குடி உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று  தெரிவித்தார்.  ஆர்.எஸ்.மங்கலத்தில் காவணக்கோட்டை  கிராமத்தில் மழைநீரால் மூழ்கிய நெற்கதிர்களை கலெக்டர் பார்வையிட்டார். உடன்   வேளாண்மைத் துறை அதிகாரிகள் மற்றும் ஆர்.எஸ். மங்கலம் வட்டாட்சியர்  ரவிச்சந்திரன், பிடிஓ.க்கள் ராஜா, பாண்டி உள்ளிட்ட அதிகாரிகளும்   சென்றிருந்தனர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்  என விவசாயிகள் சார்பில் ஒன்றிய செயலாளர் நந்திவர்மன்  உள்ளிட்டோர்  கோரிக்கை  விடுத்தனர். வருவாய் துறையினரும், வேளாண்மை துறையினரும் உடனடியாக  பாதிக்கப்பட்ட நிலங்களை கள ஆய்வு  செய்து பாதிப்பு விபரங்களை சேகரித்து  அனுப்ப வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். 

Related Stories:

>