×

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஊட்டியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு 40 சிறப்பு பஸ் வரும் 20ம் தேதி வரை இயக்கப்படுகிறது

ஊட்டி: பொங்கல் பண்டிகை மற்றும் விடுமுறைைய முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகள் மற்றும் விடுமுறையை கொண்டாட ஊட்டி வரும்  சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஊட்டியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. நாளை முதல் வரும் 17ம் தேதி வரை பொங்கல் பண்டிகை விடுமுறை வருகிறது. இச்சமயங்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை  அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பலர் வெளி மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பொங்கல் விடுமுறையின்  போது அதிகளவு வந்துச் செல்ல வாய்ப்புள்ளது. எனவே, இவர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சிரமம் இன்றி பயணிக்கவும் போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்க முடிவு  செய்துள்ளது. இதன்படி ஊட்டியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு 40 சிறப்பு பஸ்களை இயக்குகிறது.

ஊட்டியில் இருந்து கோவைக்கு தற்போது 10 நிமிடங்களுக்கு ஒரு முறை பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும், கூடுதலாக சிறப்பு பஸ்கள்  இயக்கப்படுகிறது. மேலும், திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, சென்னை மற்றும் திருப்பூர் திருச்சிக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது. மேலும், வழக்கம்  போல் சேலம், ஈரோடு உட்பட வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இப்பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் அதிகமாக  இருந்தால், தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் வரும் 20ம் தேதி இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் ஊட்டிக்கு வரும் பயணிகளின்  எண்ணிக்கை அதிகரிக்கிறது.

இதனை கருத்தில் கொண்டு ஆண்டு தோறும் பொங்கல், தீபாவளி, கோடை விடுமுறை போன்ற நாட்களில் ஊட்டியில் இருந்து வெளி  மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது. இம்முறை  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை, திருச்சி, ஈரோடு, மதுரை, சென்னை ஆகிய பகுதிகளுக்கு 40 சிறப்பு பஸகள் இயங்கப்படுகிறது. இந்த  பஸ்கள் அனைத்தும் வரும் 20ம் தேதி வரை இயக்கப்படும்.

இது தவிர வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தால், தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களும் இயக்கப்படும். கோவை மற்றும்  வெளியூர்களில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பஸ்கள் இருக்கும்.  பயணிகள் எவ்வித அச்சமும் இன்றி அரசு பஸ்களில் பயணிக்கலாம் என்றனர்.



Tags : districts ,Ooty ,holiday ,Pongal , From Ooty on the eve of Pongal holiday 40 special buses to outlying districts will run till the 20th
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை