திருத்துறைப்பூண்டியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு நெரிசலில் சிக்கி திணறியது ஆம்புலன்ஸ்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நகரில் பொங்கல் பண்டிகைக்கு தேவைக்கான பொருட்கள் வாங்க கிராமங்களில் இருந்து வந்த மக்கள்  குவிந்ததால் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் ஆம்புலன்ஸ் ஒன்று நெரிசலுக்குள் சிக்கி திணறியதால் பரபரப்பு ஏற்பட்டது.திருத்துறைப்பூண்டி பகுதியில் தொடர் மழையினால் பொதுமக்கள் 2 நாட்களாக வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் முடங்கி கிடந்தனர்.  இந்நிலையில் நேற்று காலையில் மழை சற்று ஓய்வெடுத்ததால் பொங்கல் பண்டிகைக்கு தேவையான ஜவுளி, மளிகை, கரும்பு, மஞ்சள், இஞ்சி,  காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க கிராமங்களில் இருந்து பொதுமக்கள் குவிந்ததால் நகரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகன  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று நெரிசலில்  சிக்கிக்கொண்டது. இதனால் அந்த சாலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் கடந்த 2 நாட்களாக தொடர் மழையால் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை மந்தமானது. மழை நின்றதை தொடர்ந்து பொதுமக்கள்  பொங்கலுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி போன்றவற்றை வாங்கி செல்கின்றனர். மேலும் புத்தாடைகள்,  புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர்வரிசை என பொருட்களின் விற்பனை களைகட்டியது. பொங்கலுக்கு ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில்  கிராம பகுதியில் இருந்து வந்து குவிந்த மக்கள் கூட்டம் மற்றும் டூவீலர், கார், வேன் என பெருகியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இதை தொடர்ந்து காலையில் விட்ட மழை மதியத்திலிருந்து மீண்டும் பெய்யத் தொடங்கியது.

Related Stories:

>