×

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி நேரடியாகப் பங்கேற்றுப் பேச வேண்டும் : காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி, மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 50 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம், சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதித்து நேற்று உத்தரவிட்டது. அதுமட்டுமல்லாமல் வேளாண் சட்டங்கள் குறித்த கவலைகள், பிரச்னைகள் குறித்து தெரிவிக்கவும், சிக்கல்களைக் களையவும் 4 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறுகையில், ‘உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவில் உள்ள உறுப்பினர்களின் நம்பகத்தன்மை குறித்து அரசின் வழக்கறிஞர்கள் யாரேனும் நீதிமன்றத்தில் வெளியிட முடியுமா?. வரும் 15ம் தேதி நடக்கும் விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி நேரடியாகப் பங்கேற்றுப் பேச வேண்டும். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் இந்தக் குழுவின் உறுப்பினர்கள் பெயர் பட்டியலை யார் அளித்தது எனத் தெரியவில்லை. அவர்களின் பின்புலம் ஏன் ஆய்வு செய்யப்படவில்லை, அவர்களின் நிலைப்பாடு குறித்து ஏன் ஆய்வு செய்யப்படவில்லை.

அனைத்து உறுப்பினர்களும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாளர்கள், பிரதமர் மோடிக்கு ஆதரவானவர்கள். எவ்வாறு இந்த குழுவிடம் இருந்து விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும். அதிலும் குழுவில் உள்ள உறுப்பினர்களில் ஒருவர்தான் மனுதாரராக இருக்கிறார். எவ்வாறு மனுதாரர் ஒருவரை உச்ச நீதிமன்றம் குழுவில் நியமிக்க முடியும். 4 உறுப்பினர்களுமே வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானர்கள். இந்த குழுவிடம் இருந்து விவசாயிகளுக்கு நீதிகிடைக்காது. மாநிலங்களின் உரிமைகளை பறிக்கக்கூடியது என காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது’ என்றார்.

Tags : Modi ,talks ,Congress , Prime Minister Modi
× RELATED தேர்தலுக்கு பிறகு எங்கே பாஜ? என்று...