1000 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர்’ என்ற உலக சுகாதார நிறுவனத்தின் இலக்கை இந்தாண்டே அடைய மத்திய அரசு முயற்சி : மத்திய அமைச்சர் தகவல்

குவகாத்தி : குவகாத்தி எய்ம்ஸ் மருத்துவமனையின் முதலாவாது எம்.பி.பி.எஸ் மாணவர்கள் பிரிவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலிக் காட்சி மூலம் தலைமை தாங்கினார். இதில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் திரு அஸ்வின் குமார் சவுபே கலந்து கொண்டார்.

 இந்நிகழ்ச்சியில் அனைவருக்கும் சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கை டாக்டர் ஹர்ஷ் வர்தன் நினைவு கூர்ந்தார். ‘‘குவகாத்தி எய்ம்ஸ், பிரதமரின் ஸ்வஸ்த்ய சுரக்‌ஷா திட்டத்தின் 5வது கட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட புதிய நிறுவனம்’’ என அவர் கூறினார்.  2வது எய்ம்ஸ் உருவாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உருவானதற்கே,  திரு அடல் பிஹாரி வாஜ்பாய் 50 ஆண்டுகளுக்கு முன்பு கூறியதுதான் காரணம் என்றும், அவரது  பணியை பிரதமர் திரு நரேந்திர மோடி முன்னெடுத்து செல்வதாகவும் அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.  

‘‘நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்க வேண்டும் என்பதன் குறுகிய கால நோக்கம், குறைவான கட்டணத்தில் சுகாதார சேவை கிடைப்பதில் உள்ள இடைவெளியைக் குறைப்பதுதான் என்றும், இந்திய மக்கள் நலமாக இருப்பதுதான் இதன் நீண்ட கால தொலைநோக்கு’’  என டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.ஆயிரம் நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் இலக்கை இந்தாண்டுக்குள் அடைய அரசு முயற்சிகள் எடுப்பதாக அவர் கூறினார்.

2013-14ம் கல்வி ஆண்டில் இருந்து 6 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளில் எம்.பி.பி.எஸ் இடங்களின் மொத்த எண்ணிக்கை 600 வரை அதிகரிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் 300 எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாக ஏற்படுத்தும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குவகாத்தி எய்ம்ஸ் உட்பட புதிய எய்ம்ஸ் தொடங்கப்பட்டதன் மூலம் அரசு கல்வி நிறுவனங்களில் மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 42,545 ஆக அதிகரித்துள்ளது’’ என அவர் கூறினார். “ஒட்டு மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கையை 80,000-ஆக உயர்த்த அரசு முயற்சி எடுத்து வருகிறது’’ என்றும் அவர் தெரிவித்தார்.

குவகாத்தி எய்ம்ஸ் முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Related Stories:

>