×

கொரோனா தடுப்பூசி போட 30 சதவீத தனியார் மருத்துவமனை பணியாளர்களுக்கு விருப்பமில்லை-சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

சேலம் :  கொரோனா தடுப்பூசி போடும் பணி வரும் 16ம் தேதி நடக்கிறது. இதற்கான ஆயத்த பணிகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 5.56 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் சென்னைக்கு நேற்று கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனை மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பும் பணிகள் நடந்து வருகிறது. சேலத்தில் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என 20 ஆயிரம் பேர் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் சுகாதாரத்துறை, மருத்துவத்துறை சேர்ந்த அரசு ஊழியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.

சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றுபவர்களில் 70 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட விருப்பம் தெரிவித்து பெயர் பட்டியலை சமர்ப்பித்துள்ளனர். மீதமுள்ள 30 சதவீதம் பேர் விருப்பம் தெரிவிக்கவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பூசி போட விருப்பம் தெரிவிக்கும் தனியார் மருத்துவமனைகள்  மற்றும் கிளினிக்குகள் பணியாளர்களின் விவரங்களை விரைவில் தெரிவிக்க  வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலத்தில் 70 சதவீதம் தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசி போட பெயர் பட்டியலை கொடுத்துள்ளனர். ஆனால், 30 சதவீதம் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்கள் விருப்பமில்லை என கூறியுள்ளனர். மேலும், கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க பாதுகாப்பாக இருக்கிறோம். இதனால் எங்களுக்கு கொரோனா தடுப்பூசி வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். தற்போது வரை மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது,’’ என்றனர்.

Tags : hospital staff ,corona - health officials , Salem: Corona vaccination is going on on the 16th. The health department is carrying out preparations for this.
× RELATED படுக்கையிலிருந்து கீழே விழுந்து...