×

கொரோனா விதிமுறைகளை மீறி அதிக கூட்டம் கூடியதாக சென்னை காசி தியேட்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு!: ரூ.5,000 அபராதம் விதிப்பு..!!

சென்னை: கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக சென்னை காசி தியேட்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கக்கூடிய மாஸ்டர் திரைப்படமானது ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன் நடிகர் விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அவர் பேச்சுக்கு இணங்க தமிழக முதல்வரும் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து திரைப்படத்தை வெளியிடுமாறு தெரிவித்திருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு 50 சதவீத இருக்கைகளுடன் அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளை பின்பற்றி திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படம் ஒளிபரப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலையில் இருந்து சென்னையின் பிரபல திரையரங்குகளான ரோகினி, காசி, கமலா போன்ற திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படம் வெளியிடப்பட்டது. தியேட்டர்கள், அரசு அறிவித்த கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுகின்றனவா என போலீசார் சோதனை மேற்கொண்டதில், காசி தியேட்டரில் அரசு அனுமதித்த அளவை விட பார்வையாளர்களை அனுமதித்தது தெரியவந்தது.

100 சதவீத இருக்கையுடன் பார்வையாளர்களும், இருக்கை இன்றி ரசிகர்கள் படத்தை நின்று கண்டுகளிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா விதிமுறைகளை மீறி அதிகம் கூட்டம் கூட்டியதாக காசி தியேட்டர் மீது தியாகராய நகர் காவல் நிலைய போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் திரையரங்கிற்கு 5,000 ரூபாய் அபராதமும் விதித்தனர்.


Tags : overcrowding ,Chennai Kasi Theater ,Corona , Corona rule, overcrowding, Chennai Kasi Theater, lawsuit, Rs 5,000 fine
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...