மத உணர்வுகளை புண்படுத்தியதாக திரிணாமுல் எம்பி மீது வழக்குப்பதிவு

கொல்கத்தா:மேற்குவங்கத்தில் மத உணர்வுகளை புண்படுத்தியதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி மீது போலீஸ் வழக்குபதிவு செய்துள்ளனர். மேற்குவங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் நடந்த பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், உத்தரப்பிரதேசத்தில் நடந்த ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜக அரசை குறிவைத்து குறிப்பிட மதக் கடவுள்களை குறிப்பிட்டு கொச்சையாக பேசியதாக கூறப்படுகிறது. இவரது பேச்சு தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. மேலும், இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கோலாபரி காவல் நிலையத்தில் பாஜக யுவ மோர்ச்சா சார்பில், எம்பி கல்யாண் பானர்ஜி மத உணர்வுகளை புண்படுத்தி பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் எம்பி கல்யாண் பானர்ஜி கூறுகையில், ‘நான் யாரையும் கேலி செய்யவில்லை. யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தவில்லை. போலீசில் புகார் அளிக்கப்பட்டது குறித்து எனக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீசார் வழக்கு பதிந்திருந்தாலும் கூட எனது தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் தெரியப்படுத்துவேன்’ என்றார்.

Related Stories:

>