×

வாழைத்தார் விலை வீழ்ச்சி

*பரிதவிக்கும் விவசாயிகள்

*குரலற்றவர்களின் குரல்

தமிழகம்,  மகாராஷ்டிரா, கர்நாடகா,  குஜராத், ஆந்திரா போன்ற மாநிலங்களில், தேசிய அளவில் அதிக வாழை  உற்பத்தி நடக்கிறது. இம்மாநிலங்கள்தான் வாழை உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. இந்தியாவில் ஆண்டு உற்பத்தி 2.97  கோடி டன் என்ற அளவில் உள்ளது. தமிழகத்தில், வாழை சாகுபடி பரப்பளவு 2.85 லட்சம்  ஏக்கராக உள்ளது. இதில் ஆண்டுக்கு சுமார் 56  லட்சம் டன் வாழைத்தார் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில்  பூவன், செவ்வாழை, ரோபஸ்டா,  ரஸ்தாளி, விருப்பாச்சி, நேந்திரன் போன்ற  வாழை வகைகள் அதிகளவில்  பயிரிடப்படுகின்றன.

தமிழகத்தில், வாழை உற்பத்தியில் கோவை, ஈரோடு,  கன்னியாகுமரி, திருநெல்வேலி,  திருச்சி, தூத்துக்குடி, கரூர், சேலம், மதுரை,  திருவண்ணாமலை போன்ற  மாவட்டங்கள் முன்னணியில் உள்ளன. கோவை  மாவட்டத்தில் மேட்டுப்பாளையம்,  காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம்,  அன்னூர் போன்ற பகுதிகளில் வாழை  விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள, மேற்கு  தொடர்ச்சி மலையடிவாரத்தில்  விளையும் வாழையின் தரமும், சுவையும் அதிகம்  என்பதால் இந்திய அளவில்  வரவேற்பு பெற்றதாக உள்ளது.

கேரளாவில் நேந்திரன் சிப்ஸ் உற்பத்தி அதிகளவில் நடக்கிறது. இதற்கு, மேட்டுப்பாளையம், சிறுமுகை, அன்னூர் போன்ற பகுதிகளில் இருந்து அதிக அளவில் நேந்திரன் வாழைத்தார்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது சீசன் என்பதால் நேந்திரன் வாழை உற்பத்தி அதிகரித்துள்ளது. ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக வாழைத்தார் விலை விழ்ச்சியடைந்துள்ளது. விவசாயிகள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இது குறித்து அன்னூர் பகுதி விவசாயி சுபசேகரன் கூறியதாவது: மேட்டுப்பாளையத்தில் சுமார்  5 ஆயிரம் ஏக்கரும், சிறுமுகையில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரும், அன்னூரில் சுமார் 5  ஏக்கரும் மேல் வாழை விவசாயம்  செய்யப்பட்டு வருகிறது.  இங்கு, விளையும் வாழைகளின் தரம்  மிகவும் நன்றாக உள்ளது.  அதனால், வெளி மாநிலங்களுக்கு அதிகளவில் கொண்டு  செல்லப்படுகிறது. வாழை  விவசாயத்தை நம்பி 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  குடும்பங்கள்  உள்ளன.

கேரளாவில் ஓணம், சபரிமலை சீசன் போன்ற கால கட்டங்களில், வாழை கிலோ ஒன்றுக்கு ரூ.40 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படும். ஆனால், தற்போது கொரோனா தடுப்பு விதிமுறைகள் காரணமாக மக்கள் கோயில்களுக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சபரிமலை செல்வோர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அதனால், தேவை குறைந்துவிட்டது.

அத்துடன், கேரளாவிலும் வாழை உற்பத்தி அதிகளவில் நடக்கிறது. இதுபோன்ற காரணங்களால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கோவை பகுதி விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. போதிய விலை கிடைத்தால்தான் வாழை விவசாயத்தை தொடர முடியும் என்ற நிலை உள்ளது. தற்போது, வாழை கிலோ ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இது, பெருத்த நஷ்டம் ஆகும். ஒரு வாழை வளர்க்கும் செலவைவிட மிகவும் குறைந்த விலைக்கே விற்பனை ஆகின்றன.

விலை வீழ்ச்சியை தடுத்து, விவசாயிகளை காப்பாற்ற, தமிழக அரசு சார்பில், கோவையிலேயே சிப்ஸ் உற்பத்தி நிலையம் அமைக்க வேண்டும். இங்கு, சிப்ஸ் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைத்தால் நல்ல வருவாய் கிடைக்கும். கேரளாவைப்போல் கோவையிலும் நேந்திரன் சிப்ஸ் உற்பத்தி பிரபலம் ஆகும். இதேபோல், வாழைத்தார் கொள்முதலுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு சுபசேகரன் கூறினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது: கோவையில் இருந்து கர்நாடகா, கேரளா மாநில வியாபாரிகள் வாழைத்தார்களை வாங்கி செல்கின்றனர். மழை, வெள்ளம், காற்று, உரம் விலை அதிகரிப்பு, கூலி ஆட்கள் பற்றாக்குறை, வனவிலங்கு தாக்குதல் போன்ற பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் விவசாயிகள் வாழை விவசாயம் செய்து வருகின்றனர். வாழை விலை வீழ்ச்சியடையும்போது விவசாயிகள் மட்டுமல்ல, அதை சார்ந்த சார்பு தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். வாழை இலை வியாபாரமும் பாதிக்கப்படுகிறது.

வாழை விவசாயத்தை காப்பாற்ற தமிழக அரசு, மதிப்புக்கூட்டு விற்பனை மையம் அமைக்க வேண்டும். தேவையான அளவு குளிர்பதன கிடங்கு அமைத்து கொடுக்க வேண்டும். இவற்றில், மானிய விலையில் விவசாயிகளின் வாழைத்தார்களை பாதுகாக்க வேண்டும். உரிய விலை கிைடக்கும்போது விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் அல்லது தமிழக அரசே குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்ய வேண்டும். இதுபோன்ற நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வாழை விவசாயிகளை காப்பாற்ற முடியும். இவ்வாறு சு.பழனிசாமி கூறினார்.

Tags : States like Tamil Nadu, Maharashtra, Karnataka, Gujarat and Andhra Pradesh have the highest banana production nationally. These states are the banana
× RELATED தவறு செய்யும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு