×

வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலுவைத்தொகை ₹300 கோடி அரவையை மறந்து மூடுவிழா காணும் 17 சர்க்கரை ஆலைகள்

*நட்டாற்றில் விடப்பட்ட கரும்பு விவசாயிகள், ஆலைத்தொழிலாளர்கள்

*குரலற்றவர்களின் குரல்

வேலூர் : தமிழகத்தின் விவசாய உற்பத்தியில் நெல்லுக்கு அடுத்த இடத்தை கரும்பு சாகுபடி இடம்பெற்றிருந்தது. இதன் மூலம் வெல்லம், சர்க்கரை உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் 4வது இடத்தை பிடித்திருந்தது. தமிழகத்தில் கூட்டுறவு, பொதுத்துறை, தனியார் என மொத்தம் 60 சர்க்கரை ஆலைகள் இயங்கி வந்தன.

இதில் ஆம்பூர் உட்பட 17 கூட்டுறவு, பொதுத்துறை, தனியார் சர்க்கரை ஆலைகள் தங்கள் மூச்சை நிறுத்திக் கொண்டுள்ளன அல்லது நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மட்டும் பெயரளவுக்கு தனது உற்பத்தியை தொழிற்சங்கங்களின் நெருக்குதலால் தொடங்கியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில்  தொடங்கிய சந்தை பருவத்தில், இதுவரையிலான காலத்தில் இந்தியாவின் சர்க்கரை  உற்பத்தி குறித்த விவரங்களை சர்க்கரை தொழில்துறை கூட்டமைப்பான இஸ்மா  வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 1 முதல் மே 31ம் தேதி வரையில் சர்க்கரை  ஆலைகள் இணைந்து மொத்தம் 268.21 லட்சம் டன் அளவு சர்க்கரையை உற்பத்தி  செய்துள்ளன.

கடந்த 2018ம் ஆண்டின் இதே காலத்தில் சர்க்கரை உற்பத்தி அளவு  327.53 லட்சம் டன்னாக இருந்தது. அதன்படி, 2019ம் ஆண்டில் 59.32 லட்சம் டன் உற்பத்தி சரிவு கண்டது. 2020-21ல் இது இன்னும் 10 லட்சம் டன் அளவுக்கு சரியும் என்றும் அது தெரிவித்துள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2018-19ம் ஆண்டு 7.22 லட்சம் டன்னாக இருந்த சர்க்கரை உற்பத்தி, கடந்த 2019-20ம் ஆண்டு 5.78 லட்சம் டன்னாக குறைந்தது. தற்போது அரவை தொடங்கியுள்ள நிலையில் சர்க்கரை  உற்பத்தி வெறும் 3 லட்சம் டன்னாகும் என்பது வேதனைக்குரியது.

இதுதான் தற்போதைய தமிழ்நாட்டு சர்க்கரை உற்பத்தி தொழிலின் நிலை. இத்தகைய பாதிப்புகளால், இந்தியாவிலேயே சர்க்கரை உற்பத்தியில் 4வது இடம் வகித்த தமிழ்நாடு, தற்போது 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் 30 ஆயிரம் சர்க்கரை ஆலை பணியாளர்கள், 1.5 லட்சம் மறைமுக பணியாளர்கள் மற்றும் 5 லட்சம் கரும்பு விவசாயிகள் ஆகியோரின் வாழ்க்கை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

தமிழகத்தில் அதிக சர்க்கரை ஆலைகள் அமைந்துள்ள வடதமிழகத்தில், பருவமழை பொய்த்து போனதால் நிலவும் கடுமையான வறட்சி, கரும்பு விளைச்சலை வெகுவாக பாதித்துள்ளது.     இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. தமிழகத்தில் 2014-15ம் ஆண்டு 7 லட்சம் ஏக்கராக இருந்த கரும்பு சாகுபடி பரப்பு தற்போதைய சூழலில் 3 லட்சம் ஏக்கராக சரிந்துள்ளது. உத்தரபிரதேசம், பீகார், மகாராஷ்டிரா என தேசிய அளவிலும் கரும்பு சாகுபடி பரப்பு 50 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. அதேபோல் கரும்பு மகசூலும் தமிழகத்தில் ஏக்கருக்கு 35 டன்னாக குறைந்துள்ளது. கரும்பின் சர்க்கரை அளவும் 10.5 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல் சர்க்கரை உற்பத்தி செலவு ₹30 முதல் ₹32 வரை ஆகிறது.

அதேநேரத்தில் இது வெறும் ₹35க்கு மட்டுமே விற்கப்படுகிறது. அதேநேரத்தில் கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு கடந்த ஆண்டு 2,612 ஆக இருந்தது தற்போது ₹2,705 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை நிர்ணயத்துக்கும், சர்க்கரை உற்பத்தி செலவுக்கும், விற்பனை விலைக்கும் இடையே நிலவும் சிறிய இடைவெளிேய ஒட்டுமொத்த பாதிப்புக்கு காரணம் என்கின்றனர் கரும்பு விவசாயிகள். இதுபோன்ற காரணங்கள் ஒருபுறம் என்றால் சர்க்கரை ஆலைகளும் தங்கள் பங்குக்கு சிக்கலை தேடிக் கொண்டன. குறிப்பாக தனியார் சர்க்கரை ஆலைகள் தாங்கள் வாங்கிய வங்கிக்கடனை அடைக்க மாற்றுவழியை தேடின.

வெளிநாடுகளில் இருந்து மலிவு விலையில் கிடைப்பதாக எண்ணி சர்க்கரையை மொத்தமாக வாங்கி அதனை இங்கு வெல்லம் உற்பத்தி செய்வதிலும், தாங்கள் உற்பத்தி செய்யும் சர்க்கரையிலும் கலந்து சந்தைக்கு அனுப்பினர்.இவ்வாறு வாங்கப்பட்ட சர்க்கரையில் நாளடைவில் அந்நாடுகளை சேர்ந்த சர்க்கரை ஏற்றுமதியாளர்கள் வெள்ளை மணலையும் சேர்த்து கலந்து அனுப்பினர். இது பெருத்த நஷ்டத்தை தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு ஏற்படுத்தின. இதனால் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை அதிகரித்தது.

மாநிலம் முழுவதும் பொதுத்துறை, கூட்டுறவு, தனியார் சர்க்கரை ஆலைகள் மூலம் விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத்தொகை ₹2 ஆயிரம் கோடி. ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு வர வேண்டிய நிலுவைத்தொகை ₹300 கோடி.இதுபோன்ற சிக்கல்களால் விவசாயிகள் கரும்பை விடுத்து நெல் சாகுபடியிலும், பிற சாகுபடியிலும் கவனம் செலுத்தத்தொடங்கினர். இதனால் தங்களுக்கான கரும்பு வரத்து குறைந்ததும் சர்க்கரை ஆலைகள் தள்ளாட்டத்துக்கு காரணங்களில் ஒன்றாக ஆனது.

இந்த தள்ளாட்டங்கள்தான் ஒரு காலத்தில் சர்க்கரை உற்பத்தியில் போட்டி மனப்பான்மையுடன் களம்கண்டு இயங்கிய சர்க்கரை ஆலைகள் படிப்படியாக தங்கள் இயக்கத்தை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையை மீட்டெடுத்து மீண்டும் சர்க்கரை உற்பத்தியில் தமிழகம் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இதன் மூலம் நட்டாற்றில் விடப்பட்டுள்ள கரும்பு விவசாயிகளையும், கரும்பு விவசாயத்தையும் காப்பாற்ற முடியும் என்பதே விவசாயிகள், ஆலைத்தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு.

எத்தனால் உற்பத்திக்கு ஆதரவளிக்க வேண்டும்

தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி கே.வி.ராஜ்குமாரிடம் நலிவடைந்த சர்க்கரை ஆலைகளை தூக்கி நிறுத்துவது மற்றும் கரும்பு விவசாயத்தை பாதுகாப்பது தொடர்பாக கேட்டபோது, ‘ தமிழகத்தில் அனைத்து சர்க்கரை ஆலைகளிலும் முழு அளவில் எத்தனால் தயாரித்து விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டால், மொத்தம் 50 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் விற்பனை செய்ய முடியும். அதன்மூலம் கரும்பு விவசாயிகளின் ஒட்டுமொத்த நிலுவைத் தொகையையும் கொடுத்துவிடுவதுடன், கரும்புக்கான கொள்முதல் விலையையும் உயர்த்தி வழங்க முடியும்.

ஏற்கனவே சீனா, கரீபியன், பிரேசில் போன்ற பல நாடுகள் கரும்பு சக்கையில் இருந்து எத்தனால் உற்பத்தியை வெற்றிகரமாக தொடங்கி நடத்தி வருகின்றன. நமது நாட்டிலும் ஒட்டுமொத்தமாக சர்க்கரை ஆலைகளை காப்பாற்றவும், கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகையை வழங்கிடவும், ஒவ்வொரு கரும்பு சாகுபடியின்போதும், நிலுவையின்றி கரும்பை கொள்முதல் செய்யவும், அவர்களுக்கு உரிய விலையை வழங்கவும் முடியும். ேமலும் பெட்ரோலிய இறக்குமதியை பெருமளவு குறைத்து அன்னியசெலாவணியை மிச்சப்படுத்த முடியும்’ என்றார்.

Tags : Thiruvannamalai district ,Vellore , Vellore: Sugarcane cultivation was next to paddy in the agricultural production of Tamil Nadu.
× RELATED தெள்ளார் அருகே நிலத்தகராறில் விவசாயி...