×

கீழடி, ஆதிச்சநல்லூர் உட்பட தமிழகத்தில் இந்தாண்டு 7 இடங்களில் அகழாய்வு நடைபெறும்!: தொல்லியல்துறை அறிவிப்பு..!!

சென்னை: தமிழகத்தில் இந்தாண்டு  7 இடங்களில் அகழாய்வு நடைபெறும் என தொல்லியல்துறை அறிவித்திருக்கிறது. வரலாறு, கலாச்சாரம், மக்கள் வாழ்வியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அகழாய்வின் மூலம் தகவல்களாக கிடைக்கப்பெறுகின்றன. முன்னதாக நடத்தப்பட்ட அகழாய்வில் தமிழர்களின் பாரம்பரியங்கள், நடைமுறைகள், அவர்கள் பயன்படுத்திய மண்பானைகள், செங்கல் கட்டுமானம், சுடுமண்ணாலான உறை கிணறுகள், தங்கத்தினால் ஆன ஆபரணப் பாகங்கள், செம்பிலான தொல்பொருட்கள், இரும்புக் கருவிகள், சுடுமண்ணாலான விளையாட்டுப் பொருட்கள் என பல்வேறு அறிய தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் தமிழகத்தில் இந்தாண்டு  7 இடங்களில் அகழாய்வு நடைபெறும் என தொல்லியல்துறை அறிவித்துள்ளது. கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கொடுமணல் உள்ளிட்ட 7 இடங்களில் அகழாய்வு நடைபெறவுள்ளது. இதேபோல் மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரத்திலும் அகழாய்வு பணிகள் நடைபெறும் என தொல்லியத்துறை தெரிவித்திருக்கிறது.

புதிய கற்கால இடங்களை கண்டறிய கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் முறையான தொல்லியல் கள ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதேபோல தாமிரபரணி ஆற்றங்கரை நாகரீகத்தை கண்டறியக்கூடிய திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் தொல்லியல் கள ஆய்வு நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தொல்லியல் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு இந்தாண்டு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் தொல்லியத்துறை தெரிவித்துள்ளது.


Tags : places ,announcement ,Tamil Nadu ,Adichanallur , Below, Adichanallur, 7th place, excavation, archeology
× RELATED தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள்...