×

தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்!: படகுகள் மூலம் மீட்கப்படும் மக்கள்..!!

நெல்லை: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள குடியிருப்புகளை நீர் சூழ்ந்துள்ளது. இப்பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களை படகுகள் மூலம் தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டு வருகிறார்கள். இதேபோல் நெல்லை மீனாட்சிபுரம் பகுதியில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மீனாட்சிபுரம், அண்ணாநகர் குடியிருப்பு பகுதிகளில் பல அடி உயரத்திற்கு தேங்கியுள்ள வெள்ளநீரால் குடியிருப்பு வாசிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

மேலும் வீடுகளில் உள்ள பொருட்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதையடுத்து உறவினர்கள் வீடுகளில் பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். கால்நடைகள் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை படகுகள் மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர். 3வது நாளாக குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

நெல்லை டவுனில் இருந்து மேலப்பாளையம் செல்லும் கருப்பந்துறை தரைமட்ட பாலத்தை தாண்டி வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் அந்த பாதை சீல் வைக்கப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலத்தின் இரண்டு கரைகளிக்கும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நெல்லை டவுன் பகுதியில் இருந்து மேலப்பாளையம் செல்வோர் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : areas ,river ,floods ,Tamiraparani , Tamiraparani, flood, water, boat, rescued people
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை