பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை!!

அலகாபாத் : பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்கள் விடுவிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. தொடக்கத்தில் மாநில போலீஸார் விசாரித்து வந்த இந்த வழக்கு, பின்னர் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 2020 செப்டம்பர் 30 அன்று பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் விடுவிக்கப்பட்டனர்.சிறப்பு நீதிமன்றம் தனது 2,300 பக்கங்களில் அளித்த தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டமைப்பைக் கொண்டுவருவதற்கான எந்தவொரு சதித்திட்டத்திலும் ஈடுபட்டதாக, குற்றம் சாட்டப்பட்ட 32 பேருக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று கூறியது.

இந்த நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பாக அயோத்தி குடியிருப்பாளர்கள் ஹாஜி மஹ்பூப் மற்றும் ஹாஜி சயாத் அக்லக் அகமது ஆகியோர் லக்னோ உயர் நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக பல ஆதாரங்கள் இருந்தும் அவா்களை நீதிமன்றம் விடுவித்துவிட்டதாகவும், அந்த தீா்ப்புக்கு எதிராக சிபிஐ மேல்முறையீடு செய்யாததால் தாங்கள் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் மனுதாரா்கள் தரப்பு வழக்கறிஞா் தெரிவித்திருந்தாா்.இந்த மனு அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் லக்னெள அமா்வில் நீதிபதி ராகேஷ் ஸ்ரீவாஸ்தவா முன் புதன்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories:

>