சாந்தினி சவுக் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இடிப்பு : அனுமன் கோயிலை மீண்டும் கட்ட வேண்டும்: கவர்னர் தலையிடக்கோரி பாஜ தலைவர்கள் மனு

புதுடெல்லி: மாநகராட்சி நிர்வாகத்தால் இடிக்கப்பட்ட பழமை வாய்ந்த அனுமன் கோவிலை மீண்டும் கட்டுவது தொடர்பான விவகாரத்தில் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் தலையிட வேண்டும் என பாஜ தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  டெல்லி சாந்தினி சவுக் பகுதியை மறுசீரமைக்கும் திட்டத்தை டெல்லி மாநில அரசின் பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. இதற்காக சாந்தினி சவுக் பகுதியில் இருந்த பழமை வாய்ந்த அனுமன் கோயில் ஆக்கிரமிப்பு என கூறி அதன இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, வடக்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகம் இந்த கோயிலை இடித்து தரைமட்டமாகியது. இந்நிலையில், அனுமன் கோயில் இடிக்கப்பட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி மற்றும் பாஜ கட்சியினர் பரஸ்பரம் ஒருவர் மீது மற்றொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக, இந்த கோயிலை இடிக்கும் விவகாரத்தில் அதற்கான மதக்குழுவினர் இருக்கும்போது அவர்களிடம் கலந்தாலோசிக்காமல் ஆம் ஆத்மி அரசு ஏன் இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்றது என பாஜ கேள்வி எழுப்பி வருகிறது.

மேலும், இந்த கோயிலை அதே இடத்தில் மீண்டும் கட்ட வேண்டும் என்கிற கோரிக்கையை பாஜ கட்சி முன்வைத்துள்ளது. இந்த கோரிக்கையுடன் டெல்லி பாஜ மாநில தலைவர் அதேஷ் குப்தா, டெல்லி சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் ராம்வீர் சிங் பிதூரிஆகியோர் நேற்று துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலை அவரது அலுலவலகத்தில் நேரில் சந்தித்து பேசினர். அப்போது, அனுமன் கோயிலை மீண்டும் அதே இடத்தில் கட்டுவது தொடர்பான விவகாரத்தில் தலையிட வேண்டும் என கவர்னிடம் கோரிக்கை வைத்தனர்.  இதுபற்றி அதேஷ்குப்தா பின்னர் கூறுகையில்,”ஹனுமான்  மந்திரை இடிப்பது மற்றும் அங்குள்ள பண்டைய ‘பீப்பல்’ மரத்தை அகற்றுவது  குறித்து சாந்தினி சவுக் மக்கள் மத்தியில் அதிருப்தியில் உள்ளளர்.  

அழகுபடுத்தல் என்ற பெயரில், கெஜ்ரிவால் அரசாங்கத்தின் பொதுப்பணித் துறை  சாந்தினி சவுக்கில் உள்ள புனித அனுமன் கோயிலை இடித்தது மிகவும்  துரதிர்ஷ்டவசமானது\”என்றார்.ஆனால், பாஜ ஆளும் வடக்கு மாநகராட்சி நிர்வாகம் தான் இந்த கோயிலை இடித்தது என்று ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே,  விஸ்வ இந்து  பரிஷத் (வி.எச்.பி) மற்றும் சாந்தினி சவுக் வியாபர் மண்டல் ஆகியோர் அடங்கிய குழுவினரும் பைஜலை சந்தித்து அனுமர் கோயிலை புனரமைக்கக் கோரி மனு ஒன்றை சமர்பித்ததாக வி.எச்.பி டெல்லி பிரிவு செய்தித் தொடர்பாளர் மகேந்திர  ராவத் தெரிவித்தார்.அனுமான் கோயில் கடந்த 50 ஆண்டுகளாக சாந்தினி சவுக்கின் ஒரு அடையாளமாகும் என்றும் ராவத் கூறினார். மேலும், இந்த  கோவில் முன்பு இருந்த அதே இடத்திலோ அல்லது சாந்தினி சவுக்கின் பிரதான  சாலையின் மைய பகுதியிலோ மீண்டும் புனரமைக்கப்பட வேண்டும் என்று விஎச்பி தூதுக்குழு கோரியுள்ளது.

Related Stories:

>