சாந்தின் சவுக் மறுவடிவமைப்பு: ஒயர்களை அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

புதுடெல்லி:பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்து வந்த சாந்தினி சவுக் மறுவடிவமைப்பு திட்டம் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாகி உள்ளது. பணிகள் சுறுசுறுப்பாகி உள்ள நிலையில், ஆக்ரமிப்புகள் அடியோடு அகற்றப்பட்டு அந்தப் பகுதி எழில் வடிவம் பெற்று வருவதை அடுத்து, ஆக்ரமிப்பில் மீதமுள்ள மின்சார ஒயர்களும், கேபிள் டிவி மற்றும் இன்டர்நெட் ஒயர்களும் சாலையின் குறுக்கிலும், நெடுகிலும் எங்கு பார்த்தாலும் ஊசலாடியபடி பொது மக்களுக்கு இடையூறாகவும், உயிர் அச்சுறுத்தலாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில், ஒயர்களை அகற்றும்படி அறிவுறுத்தியும் அது குறித்து பலமுறை நினைவூட்டியும் வடக்கு டெல்லி மாநகராட்சி, மஹாநகர் தொலைதொடர்பு நிறுவனம், மின்சார விநியோகத்தில் ஈடுபட்டு உள்ள பிஎஸ்இஎஸ் நிறுவனம், தனியார் கேபிள் டிவி உரிமையாளர்கள் என பலரும் அலட்சியம் செலுத்தி வருவதால், வேகம் எடுத்துள்ள புனரமைப்பு பணிகள் இப்போது தாமதமாகிறது என உயர் நீதிமன்றத்தில் சாந்தினி சவுக் மறுவடிவமைப்பு திட்டத்திற்காக நியமனம் செய்யப்பட்ட தலைமை சிறப்பு அதிகாரி மற்றும் சிறப்பு அதிகாரிகள் முறையிட்டனர்.

அந்த வழக்கு நீதிபதிகள் விபின் சங்கி, ரேகா பள்ளி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதிகாரிகள் தரப்பில் ஆஜரான வக்கீல் தனது வாதத்தில், ‘‘ஷாஜகானாபாத் மறுசீரமைப்பு திட்ட நிறுவனத்தின் அதிகாரிகள் குழு சமீபத்தில் சாந்தினி சவுக் புனரமைப்பு திட்ட செயலாக்கத்தை பார்வையிட வந்தனர்.  அப்போது அங்குமிங்கும் தொங்கிய ஒயர்களை பார்வையிட்டு, உடனடியாக அவற்றை அகற்ற அறிவுறுத்தினர். எத்தனை முறை எடுத்துக் கூறியும், வடக்கு டெல்லி மாநகராட்சி, மஹாநகர் தொலைதொடர்பு நிறுவனம், மின்சார  விநியோகத்தில் ஈடுபட்டு உள்ள பிஎஸ்இஎஸ் நிறுவனம், தனியார் கேபிள் டிவி  உரிமையாளர்கள் என பலரும் மெத்தனமாக உள்ளனர்’’, எனக் கூறினார். அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘தொங்கும் ஒயர்களை அப்புறப்படுத்த வேண்டும் என கடந்த மாதம் 20ம் தேதி உத்தரவிட்டு இருந்தோம். அந்த உத்தரவை யாரும் மதித்ததாக தெரியவில்லை.

வடக்கு டெல்லி மாநகராட்சி, மஹாநகர் தொலைதொடர்பு நிறுவனம், மின்சார  விநியோகத்தில் ஈடுபட்டு உள்ள பிஎஸ்இஎஸ் நிறுவனம், தனியார் கேபிள் டிவி  உரிமையாளர்கள் உள்பட ஒயர்களுடன் தொடர்புடைய யாராக இருந்தாலும், எந்த துறையாக இருந்தாலும், அந்த ஒயர்களை உடனடியாக அகற்ற வேண்டும். அகற்றவில்லை என்றால் நீதிமன்ற உத்தரவை அவமதிப்பு செய்ததாக கருதி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’, என எச்சரித்தனர்.

Related Stories:

>