×

டெல்லியில் மீண்டும் கடும் குளிர்: குறைந்தபட்ச வெப்பநிலை 4.3 டிகிரி

புதுடெல்லி: டெல்லியில் மழை விட்டதும் மீண்டும் குளிர் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் உள்ளேயே முடங்கினர். டெல்லியில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் குளிர் வாட்டி வதைத்தது. இமயமலை பகுதியில் இருந்து வீசிய காற்றின் காரணமாக குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியசிற்குள் பதிவானது. குறிப்பாக ஜனவரி 1ம் தேதி மிகவும் குறைந்த அளவிற்கு வெப்பநிலை பதிவானது. கடும் குளிரால் டெல்லி நடுங்கியது. இந்த சூழலில் காற்றின் திசை மாறியதால் திடீரென மழை பெய்தது. தொடர்ந்து 4 நாட்களாக பெய்த மழையால் டெல்லியின் குளிர் சூழ்நிலை மாறி வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயர்ந்தது. அதன்பின் மழை நின்று விட்டதால் மீண்டும் குளிரின் தாக்கம் டெல்லியில் அதிகரித்து வருகிறது. நேற்று சப்தர்ஜங் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.3 டிகிரி செல்சியசாக பதிவானது.

இதனால் டெல்லி முழுவதும் அடர்ந்த பனிமூட்டமாக காணப்பட்டது. மேலும் பார்வை திறனும் குறைந்தது. இந்த நிலை இனிவரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
டெல்லியில் கடந்த திங்கட்கிழமை 7 டிகிரியும், ஞாயிற்றுக்கிழமை 7.8 டிகிரியும், சனிக்கிழமை 10.8 டிகிரியும், வெள்ளிக்கிழமை 9.6 டிகிரியும், வியாழக்கிழமை 14.4 டிகிரி வெப்பமும் பதிவானது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் டெல்லியின் வெப்பநிலை குறையவில்லை. தற்போது மேகமூட்டம் மறைந்து விட்டதால் வெப்பநிலை மீண்டும் சரியத்தொடங்கி குளிர் வாட்டத்தொடங்கி விட்டது. நாளை மற்றும் நாளை மறுநாள் கடும் பனிமூட்டமாக இருக்கும், குறைந்தபட்ச வெப்பநிலை மேலும் சரிவு ஏற்படும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

டெல்லியில் குளிர் அலை
வடமாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு பனிமூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் ஆரெஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதுபற்றி இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: இனிவரும் நாட்களில் வடஇந்தியாவில் உலர் வானிலை சூழல் நிலவும். இதனால் வெப்பநிலை வழக்கத்தைவிட மிகவும் சரிந்து கடுமையான குளிர் சூழல் நிலவும். இது அடுத்த நான்கு அல்லது 5 நாட்களுக்கு நீடிக்கும். மேலும் குளிர் மற்றும் கடும் குளிர் சூழல் வடஇந்தியாவில் பஞ்சாப், அரியானா, சண்டிகார், டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தின்குறிப்பிட்ட பகுதிகள், வடக்கு மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அடுத்த 3 நாட்கள் இருக்கும்.

Tags : Delhi , Extreme cold in Delhi again: Minimum temperature 4.3 degrees
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு