×

‘பிராங்க் ஷோ’ என்ற பெயரில் இளம்பெண்களை குறிவைத்து ஆபாசமாக பேட்டி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியீடு

* யூ-டியூப் சேனல் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது
* 200க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பறிமுதல்

சென்னை: பொது இடங்களில் ‘பிராங்க் ஷோ’ என்ற பெயரில் இளம் பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்த யூ-டியூப் சேனல் உரிமையாளர், ஒளிப்பதிவாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இளம் பெண்கள் மற்றும் காதலர்களை மட்டும் குறிவைத்து யூ-டியூப் சேனல்களை சேர்ந்த சிலர் ஆபாசமாக பேட்டி எடுத்து அதை அவர்களின் அனுமதி இல்லாமல் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்துள்ளனர். அந்த ஆபாசமாக பேசக்கூடிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனால் பேட்டி கொடுத்த இளம்பெண்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 இதையடுத்து, சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் அடையார் துணை கமிஷனர் விக்ரமனுக்கு இ-மெயில் மூலம் தொடர் புகார்கள் அளித்தனர். அதன்படி துணை கமிஷனர் விக்ரமன் உத்தரவுப்படி சாஸ்திரி நகர் போலீசார் பெசன்ட் நகர் கடற்கரையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக பேட்டி எடுக்கும் நபர்களை கண்காணித்தனர். அப்போது, கடற்கரையில் ‘பிராங்க் ஷோ’ என்ற ெபயரில் ‘சென்னை டாக்’ என்ற யூ-டியூப் சேனலை சேர்ந்த 3 பேர் காதலர்கள் மற்றும் இளம் பெண்களை குறிவைத்து ஆபாசமாக கேள்விகள் கேட்டு அதை பதிவு செய்து வந்தனர். இதை பார்த்த போலீசார் யூ-டியூப் சேனலை சேர்ந்த 3 பேரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், நல்லூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்த தினேஷ்(31) என்றும், இவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் ‘சென்னை டாக்’ என்ற பெயரில் யூ-டியூப் சேனல் நடத்தி வருவது தெரியவந்தது.

நிகழ்ச்சி தொகுப்பாளராக நீலாங்கரை செங்கேCfயம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஆசின் பாஷா(23), ஒளிப்பதிவாளராக பெருங்குடி சீவரம் பகுதியை சேர்ந்த அஜய் பாபு(24) என தெரியவந்தது. இவர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்று, இளம் பெண்கள் மற்றும் காதலர்களை வழிமறித்து கேளிக்கையாக பேசி வீடியோ பதிவு செய்து வந்துள்ளனர். மேலும், இளம் பெண்களை ஆபாசமாக காட்டும் வகையில் படம் எடுத்துள்ளனர்.  அதோடு இல்லாமல், இளம் பெண்களிடம் ஆபாசமாகவும், அநாகரீகமாகவும் கேள்விகள் கேட்டு அதை கோர்வையாக தொகுத்து தங்களது யூ-டியூப் சேனலில் வெளியிட்டு வந்துள்ளனர்.

அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட இரட்டை அர்த்தமுள்ள பேட்டிகள் எடுத்துள்ளனர். குறிப்பாக, இளம் பெண்களிடம் திருமணம் நடந்து முதலிரவில் என்ன செய்ய வேண்டும், உங்களுக்கு எந்தமாதிரியான வாலிபர்களை பிடிக்கும் உள்ளிட்ட ஆபாச பேட்டிகளை எடுத்து அவர்களின் யூ-டியூப் சேனலில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதுபோன்ற ஆபாச பேட்டிகளை மட்டும் 7 கோடி மக்கள் பார்த்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் பல லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளனர்.
இதை யூ-டியூப் சேனலில் பேட்டி கொடுத்த இளம் பெண்களுக்கு தெரியாமல் பதிவேற்றம் செய்துள்ளனர். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண்கள் சம்பவம் குறித்து இவர்களிடம் போன் செய்து கேட்டால் அவர்களுக்கு மிரட்டல் விடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேட்டி எடுத்து வெளியிட்ட சென்னை டாக் யூ-டியூப் சேனல் உரிமையாளர் தினேஷ், தொகுப்பாளர் ஆசின் பாஷா, அஜய் பாபு ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், அவர்கள் நடத்திய சென்னை டாக் என்ற பெயரில் நடத்திய யூ-டியூப் சேனலை முடக்க யூ-டியூப் நிறுவனத்திற்கு போலீஸ் சார்பில் கடிதம் அனுப்பட்டுள்ளது. இதற்கிடையே 3 பேர் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதும், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிகள் முதல் ஐடி நிறுவனங்களில் வேலை செய்து வரும் இளம் பெண்கள் என பலர் புகார்கள் அளித்து வருகின்றனர். எனவே, ‘பிராங்க ஷோ’ வுக்கு பேட்டி கொடுத்த இளம் பெண்களை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து பணம் ஏதேனும் பறித்துள்ளார்களா? என்ற கோணத்திலும் போலீசார் தனது விசாரணையை தொடங்கி உள்ளனர். இதனால் 3 பேரும் பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப்களை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.

பெண்களின் இமேஜை டேமேஜ் செய்து பல கோடி வருவாய்
இளம் பெண்கள், தனியாக வரும் பெண்களிடம் ஒரு குழுவாக ெசன்று பேட்டி எடுத்து, அதை எடிட் செய்து வசனங்களை தங்களுக்கு தேவையான இடத்தில் போடுவார்கள். இது இளைஞர்களை கவரும். அந்த வகையில் 7 லட்சம் பேர் யூடியூப்பில் பார்த்துள்ளனர். அதன் மூலம் பல கோடி ரூபாய் யூடியூப் நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளனர். ஆனால் இவர்களிடம் பேட்டி கொடுத்த பெண்கள் வீட்டை விட்டே வர முடியாத அளவுக்கு அந்த வீடியோவை எடிட்டிங் செய்து வருவாய் பார்த்து உள்ளனர்.

7 முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு
இளம் பெண்களை பின் தொடர்ந்து தொந்தரவு செய்து ஆபாசமாக பேட்டி எடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ‘சென்னை டாக்’ யூ-டியூப் சேனல் உரிமையாளர் தினேஷ், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆசின் பாஷா, ஒளிப்பதிவாளர் அஜய் பாபு ஆகியோர் மீது சாஸ்திரி நகர் போலீசார் ஐபிசி 294(பி) ஆபாசமாக பேசுதல், 354(பி),பெண்களை பின் தொடர்ந்து தொந்தரவு செய்தல், 509 பெண்ணை பொது இடங்களில் அவமானம் படுத்தும் வகையில் கேள்விகள் கேட்பது, 506(2) மிரட்டுதல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் என 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 5 சட்ட பிரிவுகளின் கீழ் நீதிமன்றத்தில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் 3 பேருக்கும் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

செட்டப் பெண்கள் மூலம் சிக்க வைப்பு

பெண்கள் மீடியாக்களிடம் பேச தயக்கம் காட்டுவார்கள். எனவே, அதை போக்கவும் சகஜமாக பெண்கள் பேட்டி அளிக்கவும் வைப்பதற்காக நூதன முறையை இந்த கும்பல் கையாண்டுள்ளது. அதன்படி ஏற்கனவே பணம் கொடுத்து செட்டப் செய்யப்பட்ட 3 அல்லது நான்கு ெபண்கள் யூடியுப் குழுவினர் வருவதற்கு முன்பே பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்துவிடுவார்கள். அதில் யார் தனிமையில் இருக்கிறார்கள் என்பதை கவனித்து அவர்கள் பக்கம் அமர்ந்து விடுவார்கள். இளம்ஜோடிகள் பேசுவதை கவனித்து, யூடியுப் குழுவினருக்கு தகவல் கொடுப்பார்கள்.

இந்த குழுவினர் புதிதாக அறிமுகமாவது போல பேசிக் கொள்வார்கள். செட்டப் பெண்கள் என தெரியாமல் காதல் ஜோடிகளும் யூடியுப் சேனலுக்கு பெருமையாக பேட்டி தந்து மாட்டிக் கொண்டுள்ளனர். மேலும் இவர்களும் பெண்கள் தானே ஓபனாக பேசுகிறார்கள். நீங்கள் சொல்லுங்க என்று அவர்களை தூண்டிவிட்டு பேச ைவக்கின்றனர். அந்த இளம் பெண்கள் அவர்கள் கூறும் பதில்களை ஆபாசமாக பதிவு செய்துள்ளனர். பேட்டி கொடுக்கும் சம்பந்தப்பட்ட இளம் பெண்களிடம் செல்போன் எண்களையும் வாங்கி வந்துள்ளனர்.

வேலை ஆசை காட்டி வலை

சென்னை டாக் யூ-டியூப் சேனலை பெரிய அளவில் கொண்டு வரும் நோக்கில், வேலை தேடும் இளம் பெண்களை பகுதி நேரம் வேலை என்று ₹1000 முதல் ₹2000 வரை ஊதியம் கொடுத்து, தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான கேள்விகளுக்கு நாங்கள் சொல்வதை தான் கேமிரா முன் சொல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வீடியோ் எடுத்துள்ளனர். அதை இளம் பெண்கள் கூறியது போல் தங்களது சேனலில் பதிவேற்றம் செய்து பார்வையாளர்களை கவர்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆபீசுக்கு ‘சீல்’

சென்னை போரூரில் தினேஷ் தனது ‘சென்னை டாக்’ யூ-டியூப் சேனல் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். ஸ்டுடியோவுடன் கூடிய அலுவலகத்தில் இளம் பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். அலுவலகத்தில் சாஸ்திரி நகர் போலீசார் நடத்திய சோதனையில் பெண்களுக்கு எதிரான ஆபாச வீடியோக்கள் அடங்கிய கணினி, லேப்டாப்கள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், சேனல் நிறுவனத்தை மூடி சீல் வைத்துள்ளனர்.

இந்த சேனல் வேற மாதிரி...
‘சென்னை டாக்’ யூ-டியூப் சேனல் விளம்பரமே பின்னணி இசையுடன் பிரம்மாண்டாக இருக்கும். ‘இந்த சேனல் வேற மாதரி.... கரைட்டா பேசினால்... கரைட்டா இருக்கும்....’ என்ற வாசகத்துடன் தான் இவர்கள் எடுக்கும் வீடியோக்கள் ஒளிப்பரப்பாகும். இவர்கள் எடுக்கும் அனைத்து பிராங்க் வீடியோக்களும் ஆபாசம் நிறைந்ததாகவும், பெண்கள் பாதுகாப்புக்கு எதிராகவும் உள்ளது.

மேடம்...மேடம்... ஒரே ஒரு பேட்டி தான்
பெசன்ட் நகர் மற்றும் நீலாங்கரை கடற்கரைக்கு வரும் வசதியான பெண்களிடம் மேடம் மேடம் பிராங்க் ஷோவுக்காக ஒரே ஒரு பேட்டி மட்டும் என்று கூறி தொகுப்பாளர் ஆசின் பாஷா என்பவர் கெஞ்சி கேட்பார். பிராங்க் தானே என்று சம்பந்தப்பட்ட இளம் பெண்கள் பேட்டி கொடுப்பார்கள். அப்போது, திடீரென ஆசின் பாஷா நீங்கள் பாயிசுக்கு ஈக்கோலா தம்மு அடிபீங்களா என்று கேட்பார். அதற்கு அவர்கள் விளையாட்டாக நாங்கள் கையிலேயே சிகரெட் பாக்கெட் வைத்து இருக்கோம் என்று எடுத்து காட்டுவார்கள். அதை தங்களது யூ-டியூப் சேனலில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள்.

பெற்றோருடன் வரும் இளம்பெண்களிடம் உன் காதலன் நான்தான் என மிரட்டல்
சாலையில் தனியாக பெற்றோருடன் நடந்து  செல்லும் இளம் பெண்ணிடம், நான் தான் உன் காதலன் என்னை மறந்துவிட்டாயா என்று கூறி பொது இடங்களில் இளம் பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவது. கடையில் பெற்றோர் தனது மகளை அடிக்கும் போது, மேடம் மேடம் அடிக்காதீங்க இது ‘பிராங்க’ நிகழ்ச்சிக்காக இப்படி செய்தோம் என்று கூறி சமாதானம் செய்யும் நிகழ்ச்சி யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுத்து தங்களின் யூ-டியூப் சேனலில் பதிவேற்றம் செய்து வந்துள்ளனர். அதை பார்த்த சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் வெளியில் சொல்ல முடியாமல் தவிர்த்து வருகின்றனர்.

ஆன்டிக்கிட்ட என்னதான் இருக்கு...

தங்களது யூ-டியூப் சேனல் மூலம் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் நோக்கில் ‘சென்னை டாக்’ யூ-டியூப் உரிமையாளர் தினேஷ் ஒவ்வொரு நாளும் ஆபாசம் நிறைந்த தலைப்புகளின் படி இளம் பெண்களிடம் பேட்டி எடுத்து வந்துள்ளனர். குறிப்பாக, உங்களுக்கு ஆண்களிடம் பிடித்தது சைசா அல்லது ஸ்டேமினோவா, பாய் பெஸ்டியை வைச்சி ரிவேன்ஜி எடுப்போம், லவ் பிரேக் அப், உண்மையா லவ் பண்னேன் ஏமாத்திடான், இப்படி ஒரு லவ் ஸ்டோரியா, ஆன்டிக்கிட்ட அப்படி என்னதான் இருக்கு, மேட்டர் பிளஸ் சரக்கு நியூ இயர் 2021 என்ன பண்ணுவிங்க, 2020 எப்படி போச்சி, நிறையா பாய் பிரண்ட் வச்சி ஏமாத்துவோம், யாரு நிறைய சைட் அடிப்பாங்கா... பசங்களா...

பெண்ணுங்களா.., முதலிரவில் என்ன செய்வீங்க, பஸ்ட் நைட் அப்போது வேலை செய்யாது உள்ளிட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான 200க்கும் மேற்பட்ட தலைப்புகளை உருவாக்கி அதன் அடிப்படையில் இளம் பெண்களிடம் கேள்விகளை கேட்டு, அவர்களிடம் இருந்து பதிலை வலுக்கட்டாயமாக பெற்று தங்களது யூ-டியூப் சேனலில் பதிவேற்றம் செய்து லட்சக்கணக்கான மக்களின் கவனத்தை தங்களது யூ-டியூப் சேனல் பக்கம் திருப்பி உள்ளனர்.

Tags : women , ‘Frank Show’, teens, porn, interview, on social websites
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...