ஜெயந்தி விழாவையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைமாலை : பக்தர்கள் திரண்டனர்

நாமக்கல்: ஜெயந்தி விழாவையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு நேற்று 1  லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நாமக்கல்  கோட்டையில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோயிலில், 18 அடி  உயரத்தில் கைகூப்பி வணங்கிய நிலையில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர்  காட்சியளிக்கிறார். மார்கழி மாதம் அமாவாசையையொட்டி, நேற்று இங்கு  ஹனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு  கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு 1 லட்சத்து 8 வடைமலை சாத்தப்பட்டு  தீபாராதனை நடைபெற்றது.

அப்போது கோயிலில் திரண்டிருந்த பக்தர்கள்,  பக்தி கோஷங்களை எழுப்பியபடி சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து  நல்ெலண்ணெய், சீகக்காய், பால், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர் ஆகியவற்றால்  சுமார் 2 மணி நேரம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தங்க கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு  காட்சியளித்தார். விழாவையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் 2  டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுவாமியை தரிசனம் செய்ய ₹250  கட்டணத்தில் சிறப்பு நுழைவாயில் மற்றும் இலவச நுழைவாயில்கள்  அமைக்கப்பட்டிருந்தது. இதன் வழியாக ஏராளமான பக்தர்கள் சென்று சுவாமியை  தரிசனம் செய்தனர்.

மதியத்துக்கு மேல் கோயிலுக்கு வந்த பக்தர்கள்,  ஆஞ்சநேயரின் வடைமாலை அலங்காரத்தை காணும் வகையில், கோயில் வளாகத்தில் அகன்ற  திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. கொரோனா பீதி, தொடர் மழையால்,  வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் சற்று குறைந்திருந்தது. காலை முதல் இரவு வரை பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories:

>