×

டெல்டாவில் 2வது நாளாக கனமழை 2.41 லட்சம் ஏக்கர் சம்பா மழை நீரில் சாய்ந்து சேதம்

திருச்சி: டெல்டா மாவட்டமான, நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுகை உள்ளிட்ட மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் மதியம் முதல் நேற்று வரை இடைவிடாமல் கனமழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா, தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கியது. நாகை மாவட்டத்தில் நாகையில் 200 ஏக்கர், கீழ்வேளூர், திருமருகல், கீழையூர், வேதாரண்யத்தில் 1லட்சத்து 5ஆயிரம் ஏக்கர், மயிலாடுதுறையில் 10ஆயிரம் ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 50ஆயிரம் ஏக்கர், தஞ்சை மாவட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கர், கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கே.பேட்டை, வதியம், மனகட்டை, மருதூர், வளையபட்டி, இனிங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் 5ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மழை நீரில் சாய்ந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி, திருவெறும்பூர், மணிகண்டத்தில் 1000 ஏக்கர் என டெல்டா மாவட்டம் முழுவதும் 2லட்சத்து 41ஆயிரத்து 200 ஏக்கர் சம்பா பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்டா மாவட்ட விவசாயிகள் கூறுகையில், டெல்டா மாவட்டத்தில் நிவர் மற்றும் புரெவி புயலால் கனமழைக்கு ஏற்கனவே 3.50லட்சம் ஏக்கர் சம்பா பயிர் நாசமானது. இந்நிலையில் மீண்டும் தொடர் கனமழையால் பால்பிடிக்கும் பருவம் மற்றும் 10 நாளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்து சேதமடைந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் பயிர்கள் முளைத்துவிடுவதோடு, பலத்த சேதம் ஏற்படும். எனவே அதிகாரிகள் சேதமடைந்த வயல்களை நேரில் பார்வையிட்டு பாதிக்கட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கண்ணீருடன் தெரிவித்தனர்.

Tags : delta , In the delta, day, heavy rain, samba rain, damage
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!