×

தஞ்சை அருகே தாழ்வாக தொங்கிய மின்கம்பியில் பஸ் உரசி 4 பேர் பரிதாப பலி: அதிர்ச்சியில் 9 பேர் மயக்கம்

தஞ்சை: தஞ்சை அருகே தாழ்வாக தொங்கிய மின் கம்பியில் தனியார் பஸ் உரசியதில் 4 பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 9 பேர் அதிர்ச்சியில் மயங்கினர். தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து தனியார் பஸ் ஒன்று, நேற்று காலை 10.30 மணிக்கு மன்னார்குடிக்கு புறப்பட்டது. 11.30 மணியளவில் திருக்காட்டுப்பள்ளிக்கு வந்த இந்த பஸ், பயணிகளை ஏற்றிக்கொண்டு தஞ்சை நோக்கி சென்றது. வழியில் திருக்காட்டுப்பள்ளி - கண்டியூர் சாலையில் வரகூர் பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் புறப்பட்டது. பஸ்சில் ஆண்கள், பெண்கள் என 40 பேர் பயணம் செய்தனர்.

அங்கிருந்து 200 அடி தூரம் சென்றபோது எதிரே கண்டியூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளி சென்ற லாரிக்கு வழிவிடுவதற்காக இடதுபுறம் பஸ்சை டிரைவர் ஒதுக்கி ஓட்டினார். அப்போது அகலப்படுத்துவதற்காக சாலையோரம் போடப்பட்டிருந்த மண்ணில் பஸ் சக்கரம் சிக்கியது. கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் சேறாக இருந்த மண் உள்வாங்கியதால் பஸ் பக்கவாட்டில் சாய்ந்தது. இதில் பஸ் உள்ளே வலதுபுறம் அமர்ந்திருந்த பயணிகள் இடதுபுறமாக சரிந்து விழுந்தனர். அப்போது சாலையோரம் மிக தாழ்வாக தொங்கிய உயர்மின் அழுத்த கம்பியில் பஸ்சின் மேற்கூரை உரசியது.

பஸ்சின் கைப்பிடி கம்பியில் மின்சாரம் பாய்ந்ததில் பயணிகள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வரகூர் பஸ் நிறுத்தம் மற்றும் சாலையில் சென்றவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகளை அப்பகுதி மக்கள் உள்ளிருந்து வெளியே இழுத்து மீட்டனர். சிலர் வலதுபுறம் ஜன்னல் வழியாக பஸ்சிலிருந்து குதித்தனர். முன்னதாக மின்சாரம் தாக்கி, கருப்பூரை சேர்ந்த கணேசன்(55), வரகூரை சேர்ந்த கல்யாணராமன்(50), விழுப்பணங்குறிச்சியை சேர்ந்த நடராஜன்(45), வரகூர் பழைய குடியானத்தெரு மணிகண்டன் மனைவி கவுசல்யா(30) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

வைத்திலிங்கம் எம்பி,  மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ், டி.ஐ.ஜி. ரூபேஸ்குமார் மீனா, எஸ்பி தேஷ்முக்  சேகர் சஞ்சை ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 9 பேர் அனுமதிக்கப்பட்டு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 6 பேர் சிகிச்சை பெற்று திரும்பினர். விபத்து நடந்ததும் தப்பியோடிய பஸ் டிரைவர் ஜான் (56), கண்டக்டர் மணிகண்டன்(30) ஆகியோர் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதுதொடர்பாக திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து கவன குறைவாக பஸ்சை ஓட்டியதாக டிரைவர் ஜானை கைது செய்தனர்.

தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள் வந்து பார்வையிட்டு, விபத்தில் மின்கம்பம் சாய்ந்ததால் மின்கம்பிகள் கீழே தாழ்வாக தொங்கி இச்சம்பவம் நடந்துவிட்டது. உடனடியாக மின் கம்பிகள் சீர் செய்யப்படும் என்றனர்.

அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை
பஸ்சில் பயணம் செய்த செந்தலையை சேர்ந்த சுந்தர்ராமன்(40) கூறுகையில், எதிரில் வந்த லாரிக்கு வழிவிடுவதற்காக டிரைவர் பஸ்சை திருப்பியபோது சேற்றில் சிக்கி பக்கவாட்டில் தாழ்வாக தொங்கிய மின்கம்பியில் உரசியது. ஷாக் அடித்ததில் நான் படிக்கட்டு வழியாக கீழே விழுந்துவிட்டேன். இன்னும் அதிர்ச்சியிலிருந்து என்னால் மீள முடியவில்லை என்றார்.
செந்தலையை சேர்ந்த சந்துரு (30) கூறும்போது, இப்பகுதியில் பல இடங்களில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளது. இது குறித்து பலமுறை மின் நிலையத்திற்கு புகார் செய்தும் பலனில்லை. மின் வாரியத்தின் அலட்சியமே 4 பேரின் உயிர் பலிக்கு காரணம் என்றார்.

Tags : bus mishap ,Thanjavur , Tanjore, power line, bus, 4 people, killed
× RELATED தஞ்சாவூர் மருத்துவமனை வளாகத்தில்...