சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பாதுகாப்பு வழிமுறைகளை கண்காணிக்க 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமனம்: ஒரு மேஜையில் 3 பேருக்கு மட்டுமே அனுமதி

சென்னை: தமிழகத்தில் வரும் 19ம் தேதி முதல் பத்தாம் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கப்பட உள்ள நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாநகர கல்வி அலுவலர் பாரதிதாசன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், உதவி கல்வி அலுவலர் முனியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 38 உயர்நிலை பள்ளிகளில் 6,800 மாணவர்கள் பத்தாம் வகுப்பு படிக்கின்றனர். அதேபோல்,  32 மேல்நிலைப் பள்ளிகளில் 5,900 மாணவர்கள் பிளஸ் 2 படித்து வருகின்றனர். தற்போது பள்ளிகள் துவங்க உள்ள நிலையில் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைசெய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, பள்ளிகள் திறக்கும் முன், பின் என இருமுறை கிருமிநாசினி மூலம் பள்ளி வளாகம் சுத்தம் செய்யப்படும். மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமரும் வகையில், ஒரு மேஜைக்கு 3 மாணவர்கள் என ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவர். 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

பள்ளிக்கு வரவேண்டிய நேரம், ஒவ்வொரு குறிப்பிட்ட 25 மாணவர்களுக்கும் ஐந்து நிமிட இடைவெளி இருக்கும். அப்போது, மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்து அனுமதிக்கப்படுவர்.

அவர்கள் வீட்டிற்கு செல்லும்போதும் அதே நடைமுறை பின்பற்றப்படும். ஒவ்வொரு மாணவர்களின் உடல்நிலை, பள்ளிக்கு வரும் மற்றும் வீட்டிற்கு செல்லும் நேரம் ஆகியவை குறித்து தினசரி கண்காணிப்பு ஆசிரியர்கள் தலைமையாசிரியருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அவர், மாநகராட்சிக்கு அறிக்கை அளிப்பார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

>