×

வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை வழக்கு விசாரணையில் வலுவான வாதங்களை திமுக முன் வைத்தது: எம்பி வில்சன் பேட்டி

சென்னை: வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணையில் திமுக சார்பில் வலுவான விவாதங்கள் முன் வைத்தது என்று திமுக எம்பி வில்சன் கூறினார். வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்தது குறித்து திமுக எம்பி பி.வில்சன் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது;
வேளாண் சட்டங்களை எவ்வளவு அவசர கதியில் மத்திய அரசு நிறைவேற்றியது என்று எல்லாருக்குமே தெரியும். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் திருச்சி சிவா ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு பல்வேறு தேதிகளில் வந்தது. இன்றும் (நேற்று) அந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. இதோடு விவசாயிகள் தொடர்ந்த வழக்குகளும் சேர்த்து விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

அந்த வழக்கு மற்றும் எங்களுடைய வழக்குகள் விசாரணைக்கு வரும் போது, எங்களது வாதத்தையும் உச்ச நீதிமன்றம் கேட்டது. அப்போது எங்களது வலுவான வாதத்தை முன்வைத்தோம். மத்திய அரசு சார்பில் என்ன சொன்னார்கள் என்றால் தென் இந்தியா முழுவதும் இதற்கு சப்போர்ட் பண்ணுகிறார்கள் என்று ஒரு பொய்யான மாயையை உருவாக்கி விட்டார்கள். ‘இதை நாங்கள் எதிர்க்கிறோம் என்றும், நாடாளுமன்றத்தில் நாங்கள் 3வது பெரிய கட்சி, விவசாயிகள் நலனுக்காகவே இந்த ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளோம். அப்படி இருக்கும் போது தென் இந்தியா சப்போர்ட் பண்ணுகிறது என்று எப்படி சொல்ல முடியும். தமிழகத்தில் விவசாயிகள் திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளது. அதேபோல விஜயவாடாவில் கூட ஒரு பேரணி இருக்கிறது’ என்பதை நான் நீதிபதிகளிடம் காண்பித்தேன்.

நீதிபதிகள் இந்த வாதத்தை கேட்ட பின்பு, 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து நிறுத்தி வைப்பதாக உத்தரவு போட்டுள்ளனர். விவசாயிகளிடம் குறைகளை கேட்க 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. எங்களையும் ஏதாவது குறைகள் இருந்தால் அந்த நால்வர் குழுவிடம் சொல்லலாம் என்றும் சொன்னார்கள். உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் இப்படி உத்தரவு போட்டுள்ளனர். ஒரு சட்டம் ரத்தாகும் வரை நிறுத்தி வைப்பது என்பது பெரிய காரியம். அதை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்றால் அந்த சட்டத்தால் எந்த பலனும் இல்லை. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று தான் விவசாயிகளும், நாங்களும் போராடுகிறோம். நீதிமன்றம் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இதை நிறுத்தி வைத்திருக்கிறது. அதனால் விவசாயிகள் திருப்தி அடையும் வரை திமுக இந்த வழக்கை முன்னெடுத்து செல்லும். மத்திய அரசு இந்த 3 சட்டங்களையும் திரும்ப பெறும் வரை நாங்கள் விடமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசு சார்பில் என்ன சொன்னார்கள் என்றால் தென் இந்தியா முழுவதும் இதற்கு சப்போர்ட் பண்ணுகிறார்கள் என்று ஒரு பொய்யான மாயையை உருவாக்கி விட்டார்கள்.


Tags : DMK ,Wilson , Agricultural Law, Interim Prohibition, Inquiry, Interview with MP Wilson
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி