பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜன.19ம் தேதி பள்ளிகள் திறப்பு?: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களின் வசதிக்காக 19ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த பிப்ரவரி மாதம் பரவியது. ஆனால் மார்ச் 25ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் யாரும் வெளியில் வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர். இதனால், நாடு முழுவதுமே ஊரடங்கால் முடங்கியது.

இதையடுத்து, பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது பெரும்பாலான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள போதும் கல்வி நிறுவனங்கள் மட்டும் திறக்கப்படவில்லை. பின்னர், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிசம்பர் மாதம் வகுப்புகள் துவங்கப்பட்டன.

கடந்த மாதம் பள்ளிகள் திறக்க உத்தேசித்த நிலையில் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பொதுமக்கள், பெற்றோர் கருத்து கேட்க அரசு உத்தரவிட்டது. அதன்படி பள்ளிகளில் கடந்த மாதம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர் பள்ளிகள் திறக்கக்கூடாது என்று கருத்து தெரிவித்தனர். இதையடுத்து பள்ளிகளை திறப்பது ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தியதில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளிகள் திறக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தனர்.

அதன்படி பள்ளிகளை திறக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்  கீழ் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருக்கிறது. இந்த நோய்த் தொற்றில் இருந்து மக்களை காக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது தமிழகம் முழுவதும் நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இதையடுத்து கடந்த டிசம்பர் 28ம் தேதி நடந்த ஆய்வுக் கூட்டத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்து நிபுணர்கள், பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையின் பேரிலும் பொங்கலுக்கு விடுமுறைக்கு பிறகு 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த கருத்து கேட்பு கூட்டங்களில் கலந்து கொண்ட பெரும்பாலான பெற்றோர், பள்ளிகளை திறக்க தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இது குறித்து 95 சதவீத பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளன. இதன் பேரிலும் மாணவர்களின் கல்வி நலனுக்காகவும், வரும் 19ம் தேதி மதல் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும்.

இதன்படி பள்ளிகள் திறக்கப்படும் போது ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் பள்ளிகள் செயல்பட வேண்டும். அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டும் பள்ளிகள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.  அப்படிபள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.  அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வசதியாக, வைட்டமின் மற்றம் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவை அடுத்து தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 11 ஆயிரத்து 600 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் தொடங்க உள்ளன. இதன் படி 9 மாதங்களுக்கு பிறகு மீண்டும்  18 லட்சம் மாணவ மாணவியர் மட்டும் பள்ளிக்கு வருகின்றனர்.

Related Stories: