×

வேளாண் சட்டங்களை அமல்படுத்த தடை

* உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
* பிரச்னைகளுக்கு தீர்வு காண 4 பேர் குழு அமைப்பு
* போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான பிரச்னையை தீர்க்க நிபுணர்களை கொண்ட 4 பேர் குழுவை அமைத்துள்ளது. ஆனால், சட்டங்களை ரத்து செய்வதில் உறுதியாக உள்ள விவசாயிகள், தங்களின் போராட்டம் தொடர்ந்து நீடிக்கும் என கூறி உள்ளனர்.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம், கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து விவசாயிகள் ‘ஒப்பந்த விவசாயம்’ மேற்கொள்ளலாம் என்பது உள்ளிட்ட அம்சங்களை கொண்ட 3 புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் கொண்டு வந்தது.  நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டங்களை ரத்து செய்தே தீர வேண்டுமென டெல்லி எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த 49 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வேளாண் சட்டத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, கேரள எம்பி உட்பட 50க்கும் மேற்பட்டோர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு நேற்று முன்தினம் இவற்றை விசாரித்து, “3 வேளாண் சட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவெடுக்குமா?, இல்லை என்றால்  நாங்களே அதற்கு நேரடியாக உத்தரவு பிறப்பிக்கட்டுமா?’ என மத்திய அரசை எச்சரித்தது. மேலும், இந்த வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கை நேற்றைக்கு ஒத்திவைத்தது. அதன்படி, இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ராமசுப்ரமணியம் மற்றும் போபண்ணா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ‘‘விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த 3 சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். மக்களவையில் 3வது பெரிய கட்சியாக திமுக உள்ளது. ஆனால், இந்த சட்டத்தை நிறைவேற்றும் போது பேசுவதற்கு எங்களுக்கு எந்தவித வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் பிரச்னைகளை ஆய்வு செய்ய அமைக்கப்படும்
குழுவிடம் பேச எங்களது தரப்புக்கு வாய்ப்பளிக்க வேண்டும்,’’ என்றார்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விசாவசாய சங்கத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேந்திரன், ‘‘விவசாயம் என்பது இயற்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதுபோன்ற சூழலில் இந்த புதிய வேளாண் சட்டம் கார்பரேட் நிறுவனங்களுக்கு தான் சாதகமாக அமையும். அதனால், சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,’’ என்றார். மற்றொரு மனுதாரரான மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, ‘‘விவசாயிகள் போராடும் திறன் இல்லாமல் தற்கொலை செய்து வருகிறார்கள். அதற்கு இந்த 3 வேளாண் சட்டங்களே காரணம்,’’ என்றார். மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா ஆகியோர் வாதாடுகையில், ‘இந்த சட்டத்தால் விவசாயிகள், நிலம், விற்பனை பொருட்கள் ஆகிய அனைத்திற்கும் அரசு பாதுகாப்பாக இருக்கும்,’ என்றனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பின்னர் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் அமல்படுத்த இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மேலும், இந்த சட்டங்களுககு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் பிரச்னைக்கு தீர்வு காண, 4 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைக்கிறது. அக்குழுவில், விவசாய பொருளாதார நிபுணர் அசோக் குலாட்டி தலைமையில், பாரதிய கிசான் சங்க தலைவர் புபேந்தர் சிங் மன், சிவ்கெரி சங்கிதான் அமைப்பை சேர்ந்த அனில் தன்வாட் மற்றும் சர்வதேச விவசாய கொள்கையின் தலைவர் பிரமோத் குமார் ஜோஷி ஆகியோர் இடம் பெறுவார்கள்.  

எந்தவிதமான விசாரணைகளும் இல்லாமல் மூன்று சட்டங்களுக்கும் முழுமையாக தடை விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது. அதேபோல், யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை. அனைத்துக் கட்ட விசாரணைகளையும் முடித்த பின்னர் இந்த குழுவானது நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும். அதனை அடிப்படையாகக் கொண்டு இறுதி முடிவு எடுக்கப்படும். அதுவரை நீதிமன்றம் அதனை கண்காணித்து கொண்டிருக்கும்.  நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட குழுவை விவசாய சங்கங்கள் ஏற்க மறுப்பதை ஏற்க முடியாது. எனவே, முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எங்களால் முடிந்த வரையில் இந்த விவகாரத்தில் பிரச்னையை தீர்க்க தான் முயற்சி செய்து வருகிறோம். இந்த குழுவை ஏற்க மாட்டோம் என கூறும் விவசாயிகள் போராட்டம் நடத்த போகலாம். குழுவை மதிப்பவர்கள், அதனிடம் தங்கள் கருத்துகளை கூற வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், வழக்கை 8 வாரத்திற்கு ஒத்திவைத்தனர். சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்ற விவசாயிகள், வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். அதே சமயம், உச்ச நீதிமன்றம் அமைந்துள்ள 4 பேர் குழுவும் விவசாயிகள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

2 மாதங்களில் அறிக்கை உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
* வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் தற்பொழுது உள்ள குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் அமலில் இருக்க வேண்டும்.
* விவசாய நிலங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாய நிலங்களை கைப்பற்றுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளக் கூடாது.
* அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கான அத்தனை செலவுகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
* குழு அடுத்த பத்து நாட்களுக்குள் தங்களின் முதல் கூட்டத்தை நடத்த வேண்டும் அது நடத்தி முடித்து, 2 மாதத்திற்குள் இறுதி முடிவை எடுக்க வேண்டும்.
* குழுவின் முன்பாக வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்கள் எதிர்ப்பவர்கள் யார் வேண்டுமானாலும் அவர்களது கோரிக்கைகளை குழு முன் வைக்கலாம்.
* வழக்கு விசாரணை 8 வார காலத்திற்கு ஒத்திவைப்பு.

முதியவர்கள், பெண்கள் போராட மாட்டார்கள்
வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்துவதாக திட்டமிட்டுள்ளனர். அதற்கு தடை விதிக்க டெல்லி போலீசார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதனை பரிசீலனை செய்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே விவசாயிகள் தரப்பு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புவதாகவும், வரும் திங்கட்கிழமை வழக்கு விசாரிக்கப்படும் என உத்தரவிட்டார். முன்னதாக, விவசாயிகள் தரப்பு வாதத்தில், ‘நீதிமன்றம் அறிவுறுத்தியதை  அடுத்து இனிமேல் போராட்டத்தில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பங்கேற்க மாட்டார்கள். அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்,’ என  தெரிவிக்கப்பட்டது.

‘போராட்டத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகள்’
தலைமை நீதிபதி பாப்டே, ‘அட்டர்னி ஜெனரல் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், தடை செய்யப்பட்ட இயக்கங்கள் டெல்லி போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை அட்டர்னி ஜெனரல் உறுதிபடுத்த முடியுமா?’ என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், ‘டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில், காலிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கின்றனர். இதற்கான பிரமாண பத்திரத்தை உளவு பிரிவு அறிக்கையுடன் நாளை (இன்று) சமர்ப்பிக்கிறோம்,’’ என்றார்.

வேளாண் சட்டத்தை புகழ்ந்தவர்கள்

உச்ச நீதிமன்றம் அமைத்த 4 பேர் குழுவில் உள்ள அனைவருமே வேளாண் சட்டங்களை வரவேற்று புகழ்ந்தவர்கள். அதைப் பற்றிய விவரம்:
1. புபிந்தர் சிங் மன், பாரதிய கிசான் சங்க தேசிய தலைவர்: இவர் கடந்த டிசம்பரில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை நேரில் சந்தித்து புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தார். உடனடியாக சட்டத்தை அமலாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியவர்.
2. பிரமோத் குமார் ஜோஷி, விவசாய பொருளாதார நிபுணர்: பல பத்திரிகைகளில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக கட்டுரைகளை எழுதியவர். ‘‘புதிய வேளாண் சட்டங்களில் ஏதேனும் சிறு மாற்றம் செய்தாலும், அது இந்திய விவசாயத் துறையில் அதிகரித்து வரும் உலகளாவிய வாய்ப்புகளை கட்டுப்படுத்தும்’’ என கூறியவர்.
3. அசோக் குலாட்டி, விவசாய பொருளாதார நிபுணர், முன்னாள் வேளாண் விலை நிர்ணய கமிஷன் தலைவர்: இவரும் பல பத்திரிகைகளில் புதிய வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக கட்டுரைகளை எழுதியவர். கடந்த டிசம்பரில் புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து அவர் எழுதிய கட்டுரையில், ‘விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய விசாலமான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் சட்டம் நமக்கு தேவை. அதற்கு புதிய வேளாண் சட்டங்கள் பொருத்தமாக இருக்கும்,’’ என கூறியவர்.
4. அனில் கன்வாத், சேத்கரி சங்காத்தனா தலைவர்: ‘விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விரும்பிய இடங்களில் விற்கும் உரிமை வேண்டும், அத்தகைய சீர்த்திருத்தம் புதிய வேளாண் சட்டத்தில் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் கெஞ்சிக் கேட்டாலும், புதிய சட்டங்களை அரசு திரும்பப் பெறக் கூடாது’ என கருத்து தெரிவித்தவர்.

கமிட்டி முன் ஆஜராக மறுப்பு
உச்ச நீதின்றம் அமைத்த 4 பேர் குழு குறித்து டெல்லி சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகள் கூறுகையில், ‘‘வேளாண் சட்டங்களை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறோம்.  ஆனால், சட்டங்களை ரத்து செய்வதே எங்கள் பிரதான கோரிக்கை. உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். அதோடு, பிரச்னையை தீர்க்க அமைக்கப்பட்ட 4 பேர் குழு அரசுக்கு ஆதரவானது. அப்படிப்பட்டவர்களை கொண்டுள்ள குழு முன்பாக நாங்கள் ஒருபோதும் ஆஜராக மாட்டோம். எங்களின் போராட்டம் எப்போதும் போல் தொடரும். இந்த விஷயத்தை அரசு திசை திருப்ப முயற்சிக்கிறது. வெளியில் இருந்து அமைக்கப்படும் எந்த கமிட்டியும் வேண்டாம். வரும் 15ம் தேதி திட்டமிட்டபடி மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் நாங்கள் பங்கேற்போம்,’’ என்றனர்.

Tags : Agricultural law, to enforce, prohibit
× RELATED கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும்...