பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு ‘முக்கிய அரசியல் பிரமுகர்களை விசாரிக்காமல் விட்டுவிட்டீர்கள்’: காவல் விசாரணையில் சிபிஐயிடம் அதிமுக முன்னாள் நிர்வாகி புலம்பல்

கோவை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட பொள்ளாச்சி நகர அ.தி.மு.க மாணவரணி செயலாளர் அருளானந்தம் (34), முன்னாள் நகர இணை செயலாளர் ஹெரன் பால் (28), பாபு (29) ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ஹெரன் பாலை சிபிஐ போலீசார் நேற்று முன்தினம் காவலில் எடுத்தனர். இவரிடம் விடிய விடிய விசாரணை நடந்தது. நேற்று 2வது நாளாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஹெரன் பால், ‘‘ நானாக எந்த பெண்ணையும் அழைத்து செல்லவில்லை. நண்பர்கள் அழைத்து வந்த பெண்களுடன் ஜாலியாக இருந்தேன். திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கைதான பின்னர் நான் வேறு எந்த தவறும் செய்யவில்லை. அரசியலிலும் ஒதுங்கியே இருந்தேன்.

ஆனால் அருளானந்தம் பார் பிசினஸ், மேலிட தொடர்புகளில் ஆர்வம் காட்டினார். 5 பேர் கைதான பின்னர், போலீசார் இந்த வழக்கை முடக்கி விட்டார்கள். தம்மை தேடி யாரும் வரமாட்டார்கள் என அருளானந்தம் மிகுந்த நம்பிக்கையாக இருந்தார். அவர் கோவைக்கு சென்று முக்கிய நபர்களை அடிக்கடி சந்தித்து பேசுவார். செல்போனில் அரசியல் பிரமுகர்களை தொடர்பு கொண்டு பொள்ளாச்சிக்கு வர சொல்லுவார். எப்ப வேணாலும் வாங்க, எல்லா ஏற்பாடும் செய்து தருகிறேன் என அன்பாக அழைப்பார். அவரது அழைப்பின் பேரில் சிலர் பொள்ளாச்சி வந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் பெண்களை மிரட்டி ஜாலியாக இருந்தார்களா?, போட்டோ வீடியோ எடுத்தார்களா? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் குறுகிய காலத்தில் அவர் பொள்ளாச்சியில் பிரபலமான நபராக மாறி விட்டார்.

எனக்கு பின் அவர் அதிமுகவில் பெரிய பதவிக்கு வந்து விட்டார். அவரை பார்த்து நான் ஆச்சரியம் அடைந்தேன். அவரிடம் பல ரகசியங்கள் இருக்கிறது. அவரை நன்றாக விசாரித்தால் மேலும் சிலர் சிக்குவார்கள். நீங்கள் அவரை காவலில் எடுத்து விசாரிக்காமல் விட்டுவிட்டு என்னிடம் முக்கிய தகவல்களை கேட்கிறீர்கள். முக்கிய அரசியல் பிரமுகர்களை விசாரிக்காமல் விட்டு விட்டீர்கள். எங்களை எதற்காக இப்போது பிடித்தீர்கள்?, கைது செய்தீர்கள்?, யார் எங்களை பற்றி என்ன புகார் சொன்னார்கள்? எனக்கூட எங்களுக்கு தெரியவில்லை. நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன்’’ என்று சிபிஐ விசாரணையில் ஹெரன் பால் கூறியதாக தெரிகிறது.

Related Stories:

>