×

கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பு மருந்துகள் அனைத்து மாநிலங்களுக்கும் நாளைக்குள் அனுப்பப்படும்: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் இருந்து முதல் கட்டமாக கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் நேற்று தொடங்கியது. தடுப்பு மருந்துகள் விமானம் மூலமாக பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல், கோவாக்சின் தடுப்பு மருந்தும், கோவிஷீல்டும் நாளைக்குள் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஊசி போடும் பணி 16ம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு சீரம் நிறுவனத்திடம் இருந்து கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்வதற்காக மத்திய அரசு நேற்று முன்தினம் ஒப்பந்தம் செய்து கொண்டது. ஒரு தடுப்பூசியின் விலை ரூ.200. ஜிஎஸ்டி.யோடு சேர்த்து ரூ.210 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் இருந்து கோவிஷீல்டு தடுப்பு மருந்து விநியோகம் நேற்று காலை தொடங்கியது. இந்த நிறுவனத்தில் இருந்து முதலில் கொரோனா மருந்து ஏற்றப்பட்ட 3 குளிர்சாதன வசதி கொண்ட லாரிகள் அதிகாலை 5 மணிக்கு நிறுவனத்தில் இருந்து புறப்பட்டன. 15 கி.மீ தொலைவில் உள்ள புனே விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர் கொரோனா தடுப்பு மருந்துகள் விமானத்திற்கு மாற்றப்பட்டு 8 மணிக்கு புறப்பட்டு சென்றது.

பின்னர், 10 மணியளவில் கொரோனா தடுப்பு மருந்து ஏற்றிய விமானம் டெல்லியை வந்தடைந்தது. அங்கிருந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் தடுப்பு மருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி டிவிட்டர் பதிவில், ‘நான்கு விமான நிறுவனங்கள் கோவிஷீல்டு மருந்தை கொண்டு வருவதற்காக 9 விமானங்களை இயக்குகின்றன. 56.5 லட்சம் டோஸ்கள் புனேவில் இருந்து நாட்டின் 13 நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறறது,’ என தெரிவித்துள்ளார்.  

மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீரம் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படும் 1.10 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்தும், உள்நாட்டில் ஐதராபாத்தை சேர்ந்த பார்த் பயோடெக் நிறுவனமும், இந்திய மருந்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து, உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்து 55 லட்சம் டோஸ்களும், வரும் 14ம் (நாளை) தேதிக்குள் அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு சேர்க்கப்படும். 16ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும்,’ என கூறப்பட்டுள்ளது.

* சீரம் நிறுவனத்தில் இருந்து முதன் முதலில் கொரோனா தடுப்பு மருந்து ஏற்றி கொண்டு வாகனங்கள் புறப்படும் முன்பாக அவற்றுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
* நேற்று மதியம் நிலவரப்படி, ஆர்டர் செய்யப்பட்ட 1.10 கோடி தடுப்பு மருந்துகளில் 54.72 லட்சம் டோஸ் மருந்துகள் பெரும்பாலான மாநிலங்களுக்கு சென்று சேர்க்கப்பட்டன.

* 16.5 லட்சம் டோஸ் கோவாக்சின் இலவசம்
உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்து ஒரு டோஸ் ரூ.206க்கு வரிகளுடன் சேர்த்து வாங்கப்படுகிறது. உண்மையில் இதன் ஒரு டோஸ் விலை ரூ.295. ஆனால், வாங்கப்படும் 55 லட்சம் டோஸ்களில் 16.5 லட்சம் டோஸ்களை பாரத் பயோடெக் நிறுவனம் இலவசமாக வழங்குகிறது. இதனால், ஒரு டோஸ் விலை ரூ.206 என்ற விலைக்கு கிடைக்கிறது.

* குணமானவர்களுக்கும் தடுப்பூசி தேவை
‘ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களும், அவர்களுக்கான முறை வரும்போது கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும்,’ என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்  அறிவுறுத்தி இருக்கிறது. இது பற்றி மேலும் சில நிபுணர்கள் கூறியுள்ள கருத்துகள் வருமாறு:ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தொற்று நோய் நிபுணர் அமேஷ் அடல்ஜா: கொரோனா வந்து குணமானவர்களும், தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் பாதிக்கப்படாமல் தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தி அவசியம் என்பதால் தடுப்பு மருந்தை தவிர்க்காமல் எடுத்துக் கொள்ள வேண்டும். ஜார்ஜ் மாசன் பல்கலைக் கழக தொற்று நோய் நிபுணர் சஸ்கியா போபெஸ்கு: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் நோய் எதிர்ப்பு மண்டலத்தால் வைரசை அடையாளம் காணவும், பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். இந்த நோய் எதிர்ப்பு சக்தி பல மாதங்களுக்கு உடலில் நீடிக்கும்.

* வரலாற்று சிறப்புமிக்க தருணம்
சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதர் பூனவல்லா நேற்று அளித்த பேட்டியில், ‘‘சீரம் நிறுவனத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு கொரோனா தடுப்பு மருந்துகள் விநியோகம் அதிகாலை தொடங்கியது. ஒரு ஆண்டுக்குள் கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய விஞ்ஞானிகள், நிபுணர்கள், பங்குதாரர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்ட அனைவருக்கும் இது பெருமை மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த தருணமாகும்,” என்றார்.

* ஏப்ரலில் மேலும் 4.5 கோடி டோஸ்
சீரம் நிறுவனத்திடம் இருந்து முதல் கட்டமாக 1.1 கோடி கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளை மத்திய அரசு வாங்கியுள்ளது. இந்நிலையில், வரும் ஏப்ரலுக்குள் மேலும் 4.5 கோடி டோஸ் கோவிஷீல்டு மருந்தை வாங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ரூ.1,176 கோடி செலவாகும்.

Tags : Kovacs ,Govshield ,states ,Federal Ministry of Health , Govshield, Kovacs vaccines will be shipped to all states by tomorrow: Federal Ministry of Health information
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்