இளைஞர்களின் சிந்தனை அரசியலுக்கு மிகவும் தேவை: நாடாளுமன்ற மாநாட்டில் மோடி உரை

புதுடெல்லி: “இளைஞர்களின் சிந்தனை, ஆற்றல், உற்சாகம் ஆகியவை அரசியலுக்கு மிகவும் தேவை,’’ என கூறியுள்ள பிரதமர் மோடி, அவர்களை அரசியலில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் நடந்த 2வது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில் பிரதமர் மோடி நேற்று காணொலி மூலமாக கலந்து கொண்டு பேசியதாவது: இளைஞர்கள் அரசியலில் சேர வேண்டும். அவ்வாறு சேரவில்லை என்றால் குடும்ப அரசியல் என்ற விஷமானது தொடர்ந்து ஜனநாயகத்தை வலுவிழக்க செய்துவிடும். ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி இன்னும் இருக்கிறது. அதுதான் குடும்ப அரசியல். குடும்ப அரசியல் நாட்டின் முன் உள்ள சவாலாகும். அதனை வேரறுக்க வேண்டும்.

குடும்ப பெயர்களின் பின்னணியில் தேர்தலில் வெற்றி பெறுபவர்களின் செல்வாக்கு தற்போது குறைந்து வருகிறது என்பது உண்மை. ஆனால், அது இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை. தங்களின் குடும்ப பெயர்களை காப்பாற்றுவதற்காக அரசியல் நடத்துபவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். குடும்ப அரசியல் நடத்துபவர்களுக்கு, நாடு என்பது எப்போதும் முதலிடத்தில் இருப்பது கிடையாது. நானும், எனது குடும்பமும் என்பதற்குதான் அவர்கள் எப்போதும் முன்னுரிமை அளிப்பார்கள்.

மற்ற துறைகளை போன்றே அரசியலுக்கும் இளைஞர்கள் மிகவும் தேவையாகும். அவர்களின் சிந்தனை, ஆற்றல், உற்சாகம் ஆகியவை அரசியலுக்கு அவசியமாகும். முன்பெல்லாம் இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களின் குடும்பத்தினர் வழிதவறி செல்வதாக கூறுவார்கள். எதை வேண்டுமானாலும் மாற்றலாம் அரசியலை மாற்ற முடியாது என்பார்கள். ஆனால், இன்று நாட்டில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்கின்றனர். நேர்மையானவர்களுக்கு மக்கள் ஆதரவு தருகிறார்கள். வாய்ப்பு தருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>