×

பிடென் பதவியேற்பை தடுக்க வன்முறை அபாயம் வாஷிங்டனில் அவசரநிலை: டிரம்ப் திடீர் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் மீண்டும் கலவரம் நடக்க வாய்ப்பிருப்பதாக உளவுத்தகவல்கள் எச்சரித்துள்ள நிலையில், தலைநகர் வாஷிங்டனில் அதிபர் டிரம்ப் நெருக்கடி நிலையை (எமர்ஜென்சி) அறிவித்துள்ளார். கடந்த நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சியின் ஜோ பிடென் வெற்றி பெற்று, வரும் 20ம் தேதி புதிய அதிபராக பதவியேற்க உள்ளார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்கிறார். பிடெனின் வெற்றியை ஏற்காத டிரம்ப், தேர்தலில் முறைகேடு நடந்ததாக பல வழக்குகள் தொடுத்து அதிலும் தோல்வி கண்டார். கடந்த 6ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய அதிபராக பிடென் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருந்த நிலையில், அதை தடுக்கும் வகையில் டிரம்ப்பின் தூண்டுதலால் அவரது ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் தடையை மீறி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்ததால் வன்முறை வெடித்தது. இதில் துப்பாக்கி சூடு, தடியடி சம்பவங்களால் போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் பலியாகினர். இச்சம்பவம் டிரம்ப்புக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது. உலகளவில் கண்டனங்கள் எழுந்த நிலையில், தனது தோல்வியை ஒப்புக் கொண்டு ஒதுங்கிக் கொண்டார். பிடென் பதவியேற்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், டிரம்ப்பின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக பறிபோய்க் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், பிடென் பதவியேற்கும் 20ம் தேதி டிரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் ஆயுதங்களுடன் 50 மாகாணத்திலும் போராட்டங்களை நடத்த வாய்ப்பிருப்பதாக அமெரிக்க உளவுத்துறைகள் எச்சரிக்கை விடுத்தன.

இதைத் தொடர்ந்து, பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கும் தலைநகர் வாஷிங்டனில் அதிபர் டிரம்ப் நெருக்கடி நிலையை அறிவித்துள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘வரும் 24ம் தேதி வரை நெருக்கடி நிலை அமலில் இருக்கும். பொது உடைமைகைள், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அசம்பாவிதங்களை தவிர்க்கவே இந்த நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தலைநகர் வாஷிங்டனில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முழு நகரமும் உள்துறை மற்றும் அவசரகால மேலாண்மை அமைப்பின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

* பதவி நீக்கத்திற்கு இன்று வாக்கெடுப்பு
வன்முறையை தூண்டிவிட்ட டிரம்ப் பதவி விலக இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், அதற்கு முன் அவரை பதவியில் இருந்து நீக்க ஜனநாயக கட்சியினர் தீவிரமாக உள்ளனர். இதற்காக டிரம்ப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. 211 உறுப்பினர்கள் சேர்ந்து பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்ட இந்த பதவி நீக்க தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், செனட் சபையில் டிரம்ப் கட்சிக்கு பலம் அதிகமிருப்பது குறிப்பிடத்தக்கது.

* டிரம்ப்புடன் துணை அதிபர் மைக் பென்ஸ் திடீர் சந்திப்பு
அமெரிக்க அரசியலமைப்பு சட்ட திருத்தம் 25ஏவை பயன்படுத்தி, துணை அதிபர் மைக் பென்ஸ், அதிபர் டிரம்ப்பை பதவிநீக்கம் செய்ய வேண்டுமென நாடாளுமன்ற சபாநாயகர் பெலோசி வலியுறுத்தி வந்தார். ஆனால் பென்ஸ் அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இந்நிலையில் நாடாளுமன்ற வன்முறை சம்பவத்திற்குப் பின் முதல் முறையாக டிரம்ப், பென்ஸ் நேற்று சந்தித்தனர். அப்போது பதவிநீக்கம் பற்றி இதுவரை எதுவும் பேசவில்லை. மீதமுள்ள நாட்களில் அமெரிக்க மக்களுக்காக உழைப்போம் என அவர்கள் கூறியதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Tags : inauguration Emergency ,Biden ,Washington ,announcement ,Trump , Risk of violence to prevent Biden's inauguration Emergency in Washington: Trump's sudden announcement
× RELATED இஸ்ரேலை தாக்க வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை