தாய்லாந்து ஓபனில் பங்கேற்ற சாய்னா, பிரணாய்க்கு கொரோனா

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் தொடரில் பங்கேற்ற இந்திய நட்சத்திரங்கள் சாய்னா நெஹ்வால், எச்.எஸ்.பிரணாய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. பிரபல பேட்மின்டன் தொடரான தாய்லாந்து ஓபன், பாங்காக்கில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நம்பர் 1 வீரர் கென்டோ மொமோட்டாவுக்கு (ஜப்பான்) தொற்று இருப்பது உறுதியானதால், ஒட்டுமொத்த ஜப்பான் அணியும் இந்த தொடரில் இருந்து விலகியது. இந்த நிலையில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால், எச்.எஸ்.பிரணாய் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த  முக்கிய வீரரும், சாய்னாவின் கணவருமான பாருபள்ளி காஷ்யப்பும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவர்கள் மூவரும் தாய்லாந்தில் ஜன.12-17 தேதிகளில் நடைபெறும் தாய்லாந்து ஓபன், ஜன.19-24 தேதிகளில் நடைபெறும் டொயோட்டா ஓபன், ஜன.27-31 தேதிகளில் நடைபெற உள்ள  பிடபிள்யூஎப் வேர்ல்டு டூர் பைனல்ஸ்-2020 போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும், மற்ற இந்திய நட்சத்திரங்களான பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், சவுரவ் வர்மா, சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி, அஸ்வினி பொன்னப்பா ஆகியோர் விளையாடுகின்றனர். தாய்லாந்து ஓபனில் நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய இணை சாத்விக் - அஸ்வினி 21-11, 27-29, 21-16 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ஹபீஸ் பைசல் - குளோரியா வித்ஜஜா இணையை வீழ்த்தினர்.

* ஆஸி. ஓபன் நடக்குமா?

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி பிப்.9ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. அந்தப் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டி தற்போது கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்து வருகிறது. அதில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், வீரர்கள் இருவருக்கு தொற்று உறுதியானது. அவர்கள் அரசு நடத்தும் மருத்துவ விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

* அபுதாபியிலும் பரவல்

ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) - அயர்லாந்து அணிகளுக்கு இடையே 4 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த 2 அணிகளுக்கு இடையே கடந்த 10ம் தேதி 2வது ஒருநாள் போட்டி நடைபெற இருந்த நிலையில் 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் காரணமாக 2வது ஒருநாள்  போட்டி ஜன.12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் 4 வீரர்களுக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் இந்த போட்டி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியை யுஏஇ 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>