காயத்தால் பூம்ராவும் அவுட்! இந்திய அணிக்கு சிக்கல்

பிரிஸ்பேன்: ஆஸி. தொடரில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயம் காரணமாக தொடர்ந்து விலகுவதால், 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் தொடங்குவதற்கு முன்பாகவே முன்னணி வேகங்கள் புவனேஷ்வர், இஷாந்த் இருவரும் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. ஒருநாள், டி20 தொடர்கள் முடிந்து டெஸ்ட் தொடர் தொடங்கியதும், வீரர்கள் காயம் அடைவது தொடர்கதையாகி விட்டது. வேகப் பந்துவீச்சாளர்கள் ஷமி, உமேஷ் காயம் காரணமாக அணியில் இருந்து விலகினர். வலைப்பயிற்சியின் போது காயமடைந்த லோகேஷ் ராகுலும் நாடு திரும்பி விட்டார்.

சிட்னி டெஸ்ட்டில் ஜடேஜாவுக்கு கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக 2வது இன்னிங்சில் விளையாடவில்லை. ரிஷப் முன்னங்கையில் ஏற்பட்ட காயத்தால் 2வது இன்னிங்சில் கீப்பிங் செய்யவில்லை. முதுகுவலியால் அவதிப்படும் அஷ்வின், தொடையில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படும் விஹாரி இருவரும் வலி, வேதனைகளுக்கு இடையில் போராடி டிரா செய்ய உதவினர். ஜடேஜா தொடரில் இருந்து விலகுவதை பிசிசிஐ ஏற்கனவே உறுதி செய்து விட்டது. ரிஷப், விஹாரி, அஷ்வின் சந்தேகப் பட்டியலில் உள்ளனர்.

இந்நிலையில், நட்சத்திர வேகம் பூம்ரா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக பிசிசிஐ நேற்று அறிவித்துள்ளது. அவர் விரைவில் நாடு திரும்புவார். இது அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. நாளை மறுநாள் தொடங்கும் பிரிஸ்பேன் டெஸ்டில், பூம்ராவுக்கு பதில் ஷர்துல் அல்லது நடராஜன் இடம் பெறக்கூடும். ஜடேஜாவுக்கு பதில் குல்தீப் அல்லது சுந்தர் சேர்க்கப்படலாம். மொத்தத்தில், பிரிஸ்பேன் போட்டிக்கான 11 வீரர்களைத் தேர்வு செய்வது இந்திய அணி நிர்வாகத்துக்கு மிகம் பெரிய சவாலாகவே இருக்கும்.

Related Stories:

>