×

ஒட்டன்சத்திரத்தில் அமிர்தா எக்ஸ்பிரஸ் நின்று செல்ல வேண்டும்: அனைத்து தரப்பினரும் கோரிக்கை

ஒட்டன்சத்திரம்: மதுரை - திருவனந்தபுரம் செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு செயலாளர் சிவமணி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது கோரிக்கையில், ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் தென்னிந்தியாவின் மிகப்பெரிய மார்க்கெட்களில் ஒன்றாகும். இங்கிருந்து தமிழகம் முழுவதும் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்குவங்கம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் காய்கறிகள் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட காய்கறிகள் மட்டும் அண்டை மாநிலமான கேரளாவிற்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. கேரளாவிலிருந்து வியாபாரம் நிமித்தமாக ஒட்டன்சத்திரத்திற்கும், ஒட்டன்சத்திரத்திலிருந்து கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வியாபாரிகள் அடிக்கடி சென்று வருகின்றனர். தவிர ஒட்டன்சத்திரம் பகுதியிலிருந்து கேரளாவிற்கு கட்டிட வேலைக்கு கட்டுமான தொழிலாளர்கள் 100க்கணக்கானோர் சென்று வருகின்றனர். ஒட்டன்சத்திரம் பகுதியில் பழமை வாய்ந்த கிறிஸ்துவ ஐக்கிய மருத்துவமனையில் கேரளாவை சேர்ந்த அதிகமானோர் பணிபுரிவதுடன், சிகிச்சைக்காகவும் வந்து செல்கின்றனர்.

இப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் ஏராளமான மாணவ, மாணவிகள் கேரளாவிலிருந்து வருகின்றனர்.தற்போது மதுரை - திருவனந்தபுரம் செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று சென்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் ஒட்டன்சத்திரத்தில் இந்த ரயில் நிற்காததால் பொதுமக்கள், வியாபாரிகள், மாணவர்கள் அனைவரும் பழநி சென்று அங்கிருந்து அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது ஒட்டன்சத்திரம் பகுதிவாழ் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையும் ஆகும். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே வாரியமும், மதுரை கோட்ட பொது மேலாளரும், மதுரை - திருவனந்தபுரம் செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.

Tags : Amrita Express ,parties , Amrita Express should stop at Ottanchattaram: Demand from all parties
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...