×

புதிய வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடியுமா?: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கேள்வி

டெல்லி: 3 வேளாண் சட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியுமா என உச்சநீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியிருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசிடம் கேட்டு சொல்லுமாறு தலைமை வழக்கறிஞர் வேணுகோபாலிடம் நீதிபதிகள் அமர்வு தகவல் தெரிவித்திருக்கிறது. நேற்றைய விசாரணையில் நிறுத்தி வைக்க முடியாது என மத்திய அரசு கூறிய நிலையில் மீண்டும் கேட்கப்பட்டுள்ளது. புதிய வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் 48வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் சிலர் உயிரிழப்பதும் தொடர் சம்பவமாக நிகழ்ந்து வருகிறது. விவசாயிகள் போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். விவசாயிகள் போராட்டத்தை அரசு கையாளும் விதம் ஏமாற்றமளிக்கிறது. நிலைமை மோசமாக உள்ளது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறுத்தி வைக்காவிட்டால், நாங்கள் நிறுத்தி வைப்போம். இந்த சட்டத்தை அமல்படுத்த ஏன் அவசரப்பபட வேண்டும். வேளாண் சட்டங்களை அமல்படுத்தியே தீருவோம் என்று மத்திய அரசு நினைப்பது ஏன் என தெரியவில்லை என குறிப்பிட்டிருந்தனர். நேற்று இரவு மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் புதிய வேளாண் சட்டம் என்பது விவசாயிகளின் நலனுக்காக கொண்டுவரப்பட்டது.

விவசாயிகள் தான் இதனை தவறாக புரிந்துக்கொண்டு மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தங்கள் நிலம் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு விடும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர். ஒப்பந்த சாகுபடி என்பது வார்த்தை விளையாட்டுதான்; பயிர் இழப்பு ஏற்பட்டால் நிறுவனங்களுக்கு நஷ்டஈடு தர நேரிடும். நிறுவனங்கள் இழப்பீடு கேட்டால் நிலங்களை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், 3 வேளாண் சட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியுமா என மீண்டும் கேள்வி எழுப்பினர். மத்திய அரசிடம் கேட்டு சொல்லுமாறு தலைமை வழக்கறிஞர் வேணுகோபாலிடம் நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

மேலும் விவசாயிகள் நிலங்கள் வாங்கப்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிப்போம்; உச்சநீதிமன்றம் அமைக்கும் குழுவிடம் விவசாயிகள் தங்கள் கஷ்டங்களை தெரிவிக்கலாம். விவசாயிகள் போராட்டத்தால் பாதிக்கப்படும் மக்கள் உரிமைகள் குறித்தும் உச்சநீதிமன்றம் கவனிக்கும் என தெரிவித்தனர். உச்சநீதிமன்றத்திற்குள் அதிகாரத்தை பயன்படுத்தி வேளாண் சட்ட பிரச்சனையை தீர்க முயல்கிறோம். புதிய சட்டத்தின் படி விவசாய நிலங்களை விற்கக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பிக்க இருக்கிறோம் என்று தலைமை நீதிபதி தெரிவித்திருப்பது இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : The Supreme Court ,government , The new agricultural law, can be suspended, the Supreme Court
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...