×

தேவகோட்டை, ஆர்.எஸ்.மங்கலத்தில் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: அறுவடை செய்யும் நேரத்தில் சோகம்

தேவகோட்டை/ஆர்.எஸ்.மங்கலம்: பருவம் தவறி பெய்த மழையால் தேவகோட்டை தாலுகாவில் நெற்கதிர்கள் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடந்து வருகிறது. இப்பகுதியில் பெய்த மழையை தொடர்ந்து விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். அறுவடைக்கு தயாரான நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது. பருவம் தவறி பெய்து வரும் மழையால் நெற்கதிர்கள் தண்ணீரில் மிதக்கின்றன. ெநற்கதிர்கள் முளைத்து வீணாகி வருகின்றன. வாழைத்தோப்பில் நாள் கணக்கில் தேங்கி நிற்கும் தண்ணீரால் வாழைமரங்கள் அழுகி வருகின்றன.

இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேவகோட்டை ஒன்றியத்திலுள்ள முப்பையூர், கழுவன்காடு, மேக்காரைக்குடி, வெட்டிவயல், கடையனேந்தல், வாயவானேந்தல் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்கதிர்கள், வாழைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுபோன்று மற்ற விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம்: இதேபோல் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் செங்குடி, வரவணி, சேத்திடல், கூட்டாம்புளி, வண்டல், சனவேலி, ஏ.ஆர்.மங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

வயல்களில் உள்ள ஈரப்பதத்தால் அறுவடை இயந்திரங்கள் உள்ளே இறங்கி அறுவடை செய்ய முடியாத நிலை இருந்தது. எனவே வயல்களில் ஈரப்பதம் காய்வதற்காக விவசாயிகள் காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் நேற்றும் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்கதிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து இப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக புலம்புகின்றனர்.

Tags : Devakottai , Paddy crops submerged in rainwater at Devakottai, RS Mangalam: Tragedy at harvest time
× RELATED தேவகோட்டையில் 1500 மதுபாட்டில்கள் பறிமுதல்