லேப்டாப் வழங்காததை கண்டித்து அரசு பள்ளி மாணவிகள் சாலை மறியல்: குளித்தலையில் பரபரப்பு

குளித்தலை: குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2017-18ம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பில் பல்வேறு பாடப்பிரிவுகளில் 371 மாணவிகள் பிளஸ்-2 படித்து முடித்தனர். இதில் 6 மாணவிகளுக்கு மட்டும் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற காரணத்திற்காக இலவச லேப்டாப் அரசு மூலம் வழங்கப்பட்டது. மற்ற 365 மாணவிகளுக்கு கல்லூரி படிப்பு முடிந்து 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் தமிழக அரசு வழங்கும் இலவச லேப்டாப் இதுநாள் வரை வழங்கப்படவில்லை என பலமுறை கோரிக்கை விடுத்தும் வழங்கவில்லை. இந்நிலையில் ேநற்று காலை பள்ளிக்கு வந்த மாணவிகள் தலைமை ஆசிரியரை சந்தித்து கேட்டுள்ளனர் அப்போது தலைமையாசிரியர் அரசு உத்தரவு வழங்கினால் வழங்கப்படும் என கூறினர். இதையடுத்து மாணவிகள் அதிர்ச்சி அடைந்து பள்ளி வளாகம் முன்பு கூடி திருச்சி கரூர் சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த டிஎஸ்பி சசிதர் மற்றும் தலைமையாசிரியர் மல்லிகா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் 2017- 18 ஆண்டு பிளஸ் டூ முடித்த 365 மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை என தெரியவந்தது. இது குறித்து மேல்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர் இருந்தாலும் எங்களுக்கு உறுதியான தகவல் தெரிவிக்கும் வரை நாங்கள் போராடுவோம் என மாணவிகள் கூறினர். அதன்பிறகு அதிகாரிகள் சார்ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் பேச்சுவார்த்தைக்கு மாணவிகளை அழைத்து உள்ளார் என செய்தி வந்ததும் போலீசார் மாணவிகளை அழைத்துக்கொண்டு சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் சுமூக தீர்வு ஏற்பட்டு அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு மதிப்பளித்து வெளியே வந்தனர். இது குறித்து மாணவி ஒருவர் கூறுகையில், 2017- 18ம் ஆண்டு படித்த மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்குவது குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும் கல்வித்துறை இடமும் எடுத்துக் கூறியுள்ளோம் இது சம்பந்தமாக வருகிற திங்கட்கிழமை தெளிவான ஒரு முடிவை தெரிவிக்கிறோம் என்று கூறினர்.தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு எங்களுக்கு இலவச லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் ஒட்டுமொத்த மாணவர்களையும் ஆதரவு கேட்டு ஒன்று திரட்டி போராடும் நிலை ஏற்படுமென எச்சரித்து மாணவிகள் கலைந்து சென்றனர்.

Related Stories:

>