×

ஈமு கோழி பண்ணை நடத்தி ரூ.68 லட்சம் மோசடி: 6 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை

கோவை: கோவை அருகே உள்ள கோவைப்புதூரில் 2014-ம் ஆண்டு தனியார் ஈமு கோழிப்பண்ணை செயல்பட்டு வந்தது. இந்த பண்ணையில் இயக்குனர்களாக சுக்கிரவார்பேட்டையை சேர்ந்த சுப்பிரமணியன், பொன்னையராஜபுரத்தை சேர்ந்த சிவக்குமார், சுதீஷ், சின்னவேடம்பட்டியை சேர்ந்த மற்றொரு சிவக்குமார், கேரளா திருச்சூரை சேர்ந்த பிரான்சிஸ், பாலக்காட்டை சேர்ந்த சிவன் ஆகியோர் இருந்தனர். இந்த பண்ணையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு தொகை வழங்குவதாக கூறி பொதுமக்களிடம் முதலீட்டு பெற்னர். கோவை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 45 பேர் இந்த திட்டத்தில் ரூ.68 லட்சம் டெபாசிட் செய்தனர். ஆனால் இவர்களுக்கு அறிவித்தபடி உரிய தொகை வழங்கப்படவில்லை.

இந்த மோசடி தொடர்பாக குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த செங்காளியப்பன் என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, இயக்குனர்கள் சுப்பிரமணியன், சிவக்குமார், சுதீஷ், மற்றொரு சிவக்குமார், பிரான்சிஸ், சிவன் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணை கோவை டான்பிட் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில், குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி ரவி உத்தரவிட்டார். மேலும் 6 பேருக்கும் ரூ.18.90 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு தொகையாக வழங்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

Tags : poultry farm ,Emu , Rs 68 lakh scam for running Emu poultry farm: 6 jailed for 3 years each
× RELATED அதிமுக ஆதரவாளருக்கு சொந்தமான...