×

டெல்டாவில் விடிய விடிய மழை; 50,000 ஏக்கர் சம்பா சாய்ந்து சேதம்: விவசாயிகள் கவலை

திருச்சி: டெல்டா மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 50,000 ஏக்கர் சம்பா நெற்பயிர் சாய்ந்தது. இதனால் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். இலங்கையை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று மாலை வரையில் தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இந்தமழை காரணமாக திருவாரூர் மாவட்டம் திருவாரூர், கொராடாச்சேரி, நன்னிலம், குடவாசல், திருத்துறைப்பூண்டி உட்பட மாவட்டம் முழுவதும் தற்போது அறுவடைக்கு தயாராகி வரும் நெற்பயிர்களில் 50ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் கவலையில் இருந்து வருகின்றனர்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி தாலுகா முழுவதும் பல கிராமகளில் நடப்பு சம்பா பயிர்கள் கதிர் முற்றி அறுவடைக்கு தயாரான நிலையில் பெய்து வரும் மழையின் காரணமான பெரும்பாலான இடங்களில் நிலத்தில் சாய்ந்துவிட்டன.
திருத்துறைப்பூண்டி தாலுகாவில் மழை, வெள்ளத்தில் தாங்ககூடிய இயற்கை சாகுபடியில் செய்யப்பட்டுள்ள பாரம்பரிய நெல் ரகங்களும் தற்போது பெய்து வரும் மழையால் சாய்ந்துள்ளது. இதேபோல் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது. இந்த மழையால் சூரக்கோட்டை, ஒரத்தநாடு, பூதலூர், பட்டுக்கோட்டை, பாபநாசம், அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர் சாய்ந்தது. புதுக்கோட்டையில் விடிய விடிய மழை பெய்தது.

விராலிமலை அருகே துலக்கம்பட்டி, கீரனூர், மாத்தூர், மண்டையூர், தென்னலூர், இலுப்பூர், ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர் சாய்ந்தது. பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர், பாடாலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் தூறல் மழை பெய்தது. மழையால் 200 ஏக்கரில் சின்ன வெங்காயம், பருத்தி பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர், லால்குடி, துறையூர், மணப்பாறை, துவரங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் மழை பெய்தது. இதனால் திருவெறும்பூர் பகுதிகளில் 300 ஏக்கர் சம்பா பயிர் சாய்ந்தது. விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

நாகை மாவட்டத்தில் பெய்த கனமழையில் 50 சதவீத பயிர்கள் சேதமடைந்தது. இதனால் அதிக அளவிலான இழப்பை விவசாயிகள் சந்தித்தனர். இந்நிலையில் எஞ்சிய பயிர்களை அறுவடை செய்ய விவசாயிகள் தயர் நிலையில் இருந்தனர். கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் பரிதவித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் இரவு கனமழை பெய்தது. அடை மழையின் காரணமாக நாகை மாவட்டத்தில் 100 ஏக்கரில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்கள் சேதமடைந்தது. குறிப்பாக திருமருகல், திட்டச்சேரி, திருகண்ணபுரம், கீழ்வேளூர், புதுச்சேரி, செல்லூர், பாலையூர் பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்கள் சாய்ந்து போய்விட்டது. இதனால் நெல் மணிகள் கீழே கொட்டிவிட்டது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: புரெவி புயல் எதிரொலியால் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சேதமடைந்தது. எஞ்சிய பயிரை பாதுகாத்து அறுவடை செய்யலாம் என்று இருந்தால் அடை மழையின் காரணமாக அந்த பயிர்களும் சேதமாகி வருகிறது. பருவம் தவறிய இந்த அடை மழையால் சேதம் அடைந்துள்ளது. இவ்வாறு பயிர்கள் சேதம் ஏற்பட்டால் நெற்பயிரை அறுவடை செய்ய முடியாது. இதனால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்படும். அதே நேரத்தில் கால்நடைகளுக்கு வைக்கோல் கிடைக்காமல் போய்விடும். தமிழக அரசு உடனே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து ஈரப்பதம் அளவை உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும். அப்பொழுது தான் எஞ்சிய பயிர்களை அறுவடை செய்ய முடியும். காலதாமதம் இன்றி தைப்பொங்கலுக்குள் கொள்முதல் நிலையம் திறந்தால் விவசாயிகளுக்கு ஓரளவு பலன் கிடைக்கும் என்றனர்.

வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
தஞ்சை அருகே அம்மாபேட்டை ஒன்றியத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நீரில் மூழ்கி, அழுகி முளைத்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட இதுவரை அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதை கண்டித்தும், போர்க்கால அடிப்படையில் பாதிப்புக்குள்ளான விவசாய நிலங்களை பார்வையிட்டு உரிய கணக்கீடு செய்து அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் நேற்று அம்மாபேட்டை புத்தூர் பகுதியில் நெற்கதிர்கள் சாய்ந்த வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Delta ,samba slope , Vidya Vidya rain in Delta; Damage to 50,000 acres of samba slope: Farmers worried
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை