×

நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை; கரும்பு, மஞ்சள்குலை, அடுப்புக்கட்டி விற்பனை ஜோர்: உச்சத்தில் கத்தரிக்காய் விலை; சதமடித்தது முருங்கைக்காய்

நெல்லை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் மஞ்சள்குலை, பனைஓலை, அடுப்புக்கட்டி விற்பனை களைகட்டியுள்ளது. காய்கறி வரத்து அதிகரித்தாலும் முருங்கை, கத்தரிக்காய் விலை உச்சம் பெற்று வருகின்றன. தைப்பொங்கல் பண்டிகை, நாளை மறுநாள் (14ம் தேதி) உலகம் முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் புது பானையில் பொங்கலிட்டு சூரியனை வழிபடுவர். இதற்காக தென்மாவட்டங்களில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியுள்ளது. இந்தாண்டு இதுவரை இல்லாத அளவிற்கு விடாது மழை பெய்து வருகிறது. ஆனாலும் மழையை பொருட்படுத்தாமல் மக்கள் தங்கள் தேவைக்குரிய பொங்கல் பொருட்களை வாங்கிச் சென்ற வண்ணம் உள்ளனர்.

கொட்டித் தீர்க்கும் மழையால் பனை ஓலைகள் நனைந்து ஈரமாக உள்ளன. நேற்று வரை குறைந்த அளவிலேயே பனை ஓலைகள் விற்பனைக்கு வந்தன. மழையால் ஓலைகளை வெட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. பாளையில் நேற்று ஒரு ஓலை ரூ.30க்கு விற்பனையானது. சிறிய ஓலை ரூ.20 முதல் ரூ.25 என்ற விலையில் விற்பனையாகிறது. இதேபோல் அடுப்புக்கட்டி, மஞ்சள்குலை போன்றவற்றின் விற்பனையும் களை கட்டியுள்ளது. பனங்கிழங்கு அதிகளவில் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளது. கரும்பு, கலர் கோலப்பொடி போன்ற பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் விற்பனை ஜோராக நடக்கிறது. இதற்காக சந்தைகளில் அதிகளவில் புதிய தற்காலிக கடைகள் தோன்றியுள்ளன.

பொங்கல் பண்டிகைக்கு ஒரு நாளே இருப்பதால் காய்கறிகள் விற்பனையும் சூடுபிடித்துள்ளன. கடந்த வாரம் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.70 முதல் ரூ.80 என்ற விலையில் விற்பனையானது. இதன் விலை நேற்று நெல்லை மாவட்ட உழவர் சந்தைகளில் கிலோ ரூ.100 ஆக உயர்ந்தது. பிற சந்தைகளில் ரூ.110 ஆக இருந்தது. முருங்கை காய் விளைச்சலும் குறைவாக உள்ளதால் வரத்தும் குறைவாக உள்ளது. கத்தரிக்காய் விளைச்சலும் குறைந்துள்ளதால் இதன் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று உழவர் சந்தையில் ஒரு கிலோ முதல் ரக கத்திரிக்காய் ரூ.80க்கு விற்பனையானது. 2ம் ரகம் ரூ.40க்கு விற்கப்பட்டது. மாங்காய் கிலோ ரூ.55க்கும், பல்லாரி ரூ.50க்கும், சின்ன வெங்காயம் ரூ.74க்கும் விற்பனையானது.

சேனைக்கிழங்கு ரூ.26, சேம்பு ரூ.40, கருணைக்கிழங்கு ரூ.45, சிறுகிழங்கு ரூ.60, வள்ளிக்கிழங்கு ரூ.50, பனங்கிழங்கு  ரூ.50 என்ற விலையில் விற்பனையாகிறது. வெளிச்சந்தைகளில் இவற்றின் விலை மேலும் உயர்ந்திருந்தது. தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்யும் மழையால் காய்கறி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. சந்தைகள் மற்றும் பிற பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் கடைவிரிக்க முடியாமல் விவசாயிகள், வியாபாரிகள் சிரமப்படுகின்றனர். சந்தைகள் பகுதியில் உள்ள சாலைகளும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. தலைப்பொங்கல் கொண்டாடும் தம்பதிகளுக்கு சீர் கொடுப்பதற்காக பொதுமக்கள் மழையை பொருட்படுத்தாமல் காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.


Tags : festival ,Centurion , Pongal festival the next day; Sugarcane, turmeric, stove sales jor: eggplant prices peak; Centurion drumstick
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!