×

நாளை போகி பண்டிகை; குமரியில் பொங்கல் பொருட்கள் விற்பனை சூடுபிடித்தது: மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம்

நாகர்கோவில்: பொங்கல் பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க, மார்க்கெட்டுகளில் மக்கள் அதிகளவில் வர தொடங்கி உள்ளனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14ம்தேதி கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்திலும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளன. இந்த முறை கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக  விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பொங்கலையொட்டி வீடுகளில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளும் நடந்த வண்ணம் உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி நாளை (13ம் தேதி) போகி பண்டிகை ஆகும்.

பழையன கழிதலும், புதியன புகுதலும் தான் போகி ஆகும். எனவே வீடுகளில் தேவையில்லாத பொருட்களை தீ வைத்து கொளுத்துவார்கள். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் போகி கொண்டாட்டங்கள் அமைய வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொங்கல் பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. குமரி மாவட்டத்தில் திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்புகள் விற்பனைக்காக வந்து குவிந்துள்ளன. வடசேரி, ஒழுகினசேரி அப்டா மார்க்கெட், மார்த்தாண்டம், திங்கள்சந்தை உள்ளிட்ட மார்க்கெட் பகுதிகளில் நேற்று காலை முதல் ஏராளமானவர்கள் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வாங்கி சென்றனர்.

கரும்பு ஒரு கட்டு ரூ.400, ரூ.500 என விற்பனை செய்யப்படுகிறது. ராஜபாளையம், நிலக்கோட்டை, திருச்செந்தூர், உடன்குடி உள்ளிட்ட  பகுதிகளில் இருந்து மஞ்சள் குலைகள் மற்றும் பனங்கிழங்கு வியாபாரிகள் வந்துள்ளனர். இதே போல் பொங்கல் பானைகள் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. பித்தளை, வெண்கல பானைகள் பல்வேறு வடிவங்களில் விற்பனைக்காக உள்ளன. ஆனால் கடந்த ஆண்டை விட விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் (15ம் தேதி) மாட்டு பொங்கல் ஆகும். அதற்கு மறுநாள் காணும் பொங்கல் ஆகும். பொங்கலையொட்டி வரும் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை தொடர்ந்து விடுமுறை வருவதால் சுற்றுலா தலங்களுக்கு வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் சுமார் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். கடலோர பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களில் சிறப்பு ரோந்து படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே குமரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக மழை நீடித்து வருவதால் வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். தொடர் மழையால் மக்கள் வீடுகளில் முடங்கினால் வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றனர்.

170 சிறப்பு பஸ்கள் இயக்கம்
பொங்கல் பண்டிகையையொட்டி, நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 170  சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இன்று (12ம்தேதி) சென்னைக்கு 26 பஸ்களும், மதுரைக்கு 20 பஸ்களும், கோவைக்கு 4 பஸ்களும் செல்கின்றன. 13ம் தேதி, சென்னைக்கு 8, மதுரைக்கு 19, கோவைக்கு 5 பஸ்களும் செல்கின்றன. 17ம்தேதி சென்னைக்கு 20, மதுரைக்கு 30, கோவைக்கு 6 பஸ்களும், 18ம் தேதி, சென்னைக்கு 8, மதுரைக்கு 12, கோவைக்கு 4 பஸ்களும் இயக்கப்படுகின்றன. 19ம் தேதி சென்னைக்கு 4, மதுரைக்கு 4 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Tags : Bogie Festival ,Crowds ,Kumari , Tomorrow is the Bogie Festival; Pongal products sales heat up in Kumari: Crowds at markets
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து