×

அமிர்தி வன உயிரியல் பூங்காவில் கிருமி நாசினி தெளிப்பு: பறவை, விலங்குகளுக்கு மருத்துவ பரிசோதனை

வேலூர்: பறவை காய்ச்சல் எதிரொலியாக அமிர்தி வன உயிரியல் பூங்காவில் பறவை, விலங்குகளை கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்தார். அப்போது விலங்குகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடி தகவல் தர வனத்துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் ஆலப்புழா, கோட்டயம் போன்ற மாவட்டங்களில் வாத்துக்களுக்கு பறவைக்காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழக கேரள மாநில எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு கோழி, வாத்து, முட்டைகளை ஏற்றி வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறது.

மேலும் கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல், அரியானா, குஜராத் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியது. இதனால் தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை கால்நடை துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நாடு முழுவதும் மிருகக்காட்சி சாலையில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மிருகக்காட்சி சாலைகள் நிர்வாகத்திற்கு மத்திய மிருகக்காட்சி சாலை ஆணையம் கடிதம் அனுப்பியது.

அதன்படி, வேலூர் மாவட்டம் அமிர்தி வன உயிரியல் பூங்காவில் ஜமுனாமரத்தூர் கால்நடை மருத்துவர் வரதராஜன் நேற்று முன்தினம் பூங்காவில் உள்ள பறவைகள், விலங்குகளை பரிசோதனை செய்தார்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பறவை காய்ச்சல் எதிரொலியாக அமிர்தி வன உயிரியல் பூங்காவில் கால்நடை மருத்துவர் வரதராஜன், விலங்குகளுக்கு மாத்திரைகளும், பறவைகளுக்கு டானிக் மருந்துகளை பரிந்துரை செய்துள்ளார். மேலும் பூங்கா முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பூங்காவிற்கு கட்டாயம் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. விலங்குகள், பறவைகள் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக கால்நடை துறை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றனர்.

Tags : examination ,Amirthi Wildlife Sanctuary , Disinfectant spray at Amirthi Wildlife Sanctuary: Medical examination of birds and animals
× RELATED இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப...