தமிழகம் வந்தது 5.56 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி..! சென்னை மாநில கிடங்கில் இருந்து பல்வேறு மையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை

சென்னை: புனேவில் இருந்து விமானத்தில் 5.56 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி சென்னை வந்தன. சென்னையில் இருந்து தமிழகத்தின் 10 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஜன.16 முதல் முன்களப்பணியாளர்களுக்கு போடப்படுகிறது. ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் தமிழகத்துக்கு முதல்கட்டமாக 5.56 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் இன்று வந்துள்ளன. கொரோனா தடுப்பூசி மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதலில் போடப்படும். தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமல்ல தாங்களாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்பட உள்ளது. 30 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை போடப்படும் என்றும், இரண்டு முறை தடுப்பூசி போட்டால்தான் பலனளிக்கும் என்றும் தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார். தடுப்பூசிகளை செலுத்துவதற்காக மாநிலம் முழுவதும் 307 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்குவது குறித்து கடந்த 9-ஆம் தேதி டெல்லியில் பிரதமா் மோடி தலைமையில் உயா்நிலைஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வரும்16-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணியைத் தொடங்க இக்கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. தமிழகத்தில் ஜனவரி 16- ஆம் தேதி மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்று கரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வா் பழனிசாமி தொடக்கி வைக்கவுள்ளாா். தமிழகத்தில் 307 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளன. சென்னை வந்துள்ள தடுப்பூசிகள் மாநில கிடங்கிற்கு கொண்டு வந்து பின்னர் தமிழகத்தில் உள்ள பல்வேறு மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

Related Stories:

>