திருப்பத்தூரில் குறைதீர்வு கூட்டம்: பாலாற்றில் இரவு பகலாக மணல் கடத்தல்: டிஆர்ஓவிடம் பொதுமக்கள் புகார் மனு

திருப்பத்தூர்: ஆம்பூர் பாலாற்றில் இரவு பகலாக அதிகளவில் மணல் கடத்தப்பட்டுள்ளதாக திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் டிஆர்ஓவிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் ஆலங்காயம் ஆகிய 5 இடங்களில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு டிஆர்ஓ தங்கையாபாண்டியன் தலைமை தாங்கினார். இதில், நிலப்பட்டா, சாதிச்சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வேலை வாய்ப்பு, இலவச மின் இணைப்பு, காவல் துறை பாதுகாப்பு, கல்விக்கடன் உள்ளிட்ட பொதுநல மனுக்களை டிஆர்ஓ பெற்றுக்கொண்டார்.

ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் மற்றும் பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆலாங்குப்பம் மற்றும் பெரியாங்குப்பம் பகுதியை ஒட்டியுள்ள பாலாற்றில் இரவு, பகல் பாராமல் மணல் கடத்தப்பட்டு வருகிறது. தினந்தோறும் 40 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்படுகிறது. வருவாய் துறை மற்றும் காவல் துறையினருக்கு தெரிந்தே மணல் கடத்தப்பட்டு வருகிறது. ஆற்று மணல் கடத்தல் தொழிலில் அதிக வருவாய் கிடைப்பதால் 15 வயது முதல் 25 வயதுள்ள இளைஞர்கள் அதிகளவில் இத்தொழிலில் ஈடுபட்டு எதிர்காலத்தை பாழாக்கி வருகின்றனர். அது மட்டுமின்றி கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை அதிகளவில் நடக்கிறது. இதனால், போதை தலைக்கேறிய இளைஞர்கள் செய்வதறியாமல் பல்வேறு சமூக விரோதச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆம்பூர் மங்களாபுரம் பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் என்ற இளைஞர் கஞ்சா போதையில் மாட்டு வண்டியை ஓட்டி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க ஆலாங்குப்பம் மற்றும் பெரியாங்குப்பம் பகுதியில் மணல் கடத்தல் மற்றும் போதைபொருள் விற்பனையை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தனர். திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மக்கள் அளித்த மனுவில், ‘திருப்பத்தூர் பகுதியில் நகராட்சி சார்பில் குடிநீர் சரிவர சப்ளை செய்யப்படவில்லை. பண்டிகை காலம் என்பதால் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே நாள்தோறும் இங்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.  மனுக்களை பெற்றுக்கொண்ட டிஆர்ஓ அனைத்து துறை அதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Related Stories:

>