குரங்குகளையும் விட்டுவைக்காத கொல்லுயிரி!: கலிபோர்னியாவில் 2 கொரில்லாக்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிதீவிரமாக பரவி வரும் கொரோனா கொல்லுயிரி குரங்குகளையும் விட்டுவைக்கவில்லை. அங்கு 2 கொரில்லா வகை குரங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தின் சான்டியாகோ நகரத்தில் சஃபாரிபார்ட் என்ற உயிரியல் பூங்கா ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கொரில்லா குரங்குகளில் சிலவற்றிற்கு தொடர்ச்சியாக இருமல், அயர்ச்சி உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. இதனையடுத்து கொரில்லாக்கள் அனைத்திற்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

இதில் 2 குரங்குகளுக்கு கோவிட் - 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விலங்குகள் பராமரிப்பு பணியாளர்களிடம் இருந்து குரங்குகளுக்கு கிருமி தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று பூங்கா நிர்வாகிகள் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து விலங்கியல் பூங்கா இயக்குநர் லிசா பீட்டர்சன் தெரிவித்ததாவது, தொற்று ஏற்பட்டுள்ள போதும் குரங்குகள் நலமுடன் உள்ளன. சில கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளன. குரங்குகளை தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றோம். நன்றாக சாப்பிடுகின்றன; நீர் அருந்துகின்றன. இதுவரை பிரச்சனை ஏதும் இல்லை.

தீவிர கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து வருகின்றோம். இருப்பினும் அறிகுறி தென்படாத பூங்கா ஊழியர்கள் மூலம் இந்த கிருமி குரங்குகளுக்கு பரவி இருக்கலாம். சான்டியாகோ நகர நிர்வாகத்தின் விதிமுறைகளை தீவிரமாக கடைபிடித்து வருகிறோம் என குறிப்பிட்டார். இதனிடையே  சான்டியாகோ பூங்காவில் உள்ள மற்றொரு கொரோனாவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதனையடுத்து விலங்கியல் பூங்கா வளாகத்தில் உள்ள அனைத்து வகை குரங்குகளும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

Related Stories:

>