உலகின் நீண்டதூர வான் வழித்தடத்தில் 17 மணி நேரம் விமானம் இயக்கி பெண் விமானிகள் குழு சாதனை: பெங்களூரு வந்தடைந்தனர்

புதுடெல்லி: வடதுருவத்தின் வழியாக மிக நீளமான விமான பாதையை பெண் விமானிகள் குழு முதன் முதலாக கடந்து நேற்று பெங்களூரு வந்தடைந்தது. உலகின் மிக நீண்ட விமான பாதைகளுள் சான்பிரான்சிஸ்கோ முதல் பெங்களூரு  வரையிலான விமான பாதையும் ஒன்றாகும். இது சுமார் 13,993 கி.மீ தூரம் கொண்டதாகும். காற்றின் வேகத்தை பொறுத்து இந்த பாதையை கடப்பதற்கு 17 மணி நேரத்துக்கு மேலாகும். முதல் முதலான இந்த பாதையில் பெண் விமானிகள் குழு  விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளனர். பெண் விமானி சோயா அகர்வால் தலைமையிலான பெண் விமானிகள் பாபா கரி தன்மாய், அகன்சா சோனேவாரி மற்றும் ஷிவானி ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த சாதனையை  செய்துள்ளனர். சனியன்று உள்ளூர்நேரப்படி இரவு 8.30 மணிக்கு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை 3.45மணிக்கு பெங்களூருவின் கெம்பேகவுடா  விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் பூரி பெண் விமானிகள் குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Related Stories: