×

அமெரிக்க அரசியலில் பரபரப்பு: டிரம்பை பதவியிலிருந்து நீக்க துணை அதிபருக்கு கெடு: சபாநாயகர் பெலோசி அதிரடி

வாஷிங்டன்: ‘அதிபர் பதவியிலிருந்து டிரம்ப்பை நீக்க துணை அதிபர் 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கெடு விதித்துள்ளார். அமெரிக்காவில் புதிய அதிபராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடெனின் வெற்றியை ஏற்றுக் கொள்ளாத டிரம்ப் ஆதரவாளர்கள், கடந்த 7ம் தேதியன்று நாடாளுமன்றத்தை சூழ்ந்து போராட்டம் நடத்தினர். பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிய இந்த சம்பவம் குறித்து உலக நாடுகள்  பலவும் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகரான நான்சி பெலோசி, அதிபர் பதவியிலிருந்து டிரம்ப்பை நீக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறி உள்ளார். அமெரிக்காவின் அரசிய லமைப்புபடி, சட்டத்திருத்தம்  25-ஐப் பயன்படுத்தி துணை அதிபரால் அதிபரை பதவியிலிருந்து நீக்க முடியும். எனவே, இதற்கான நடவடிக்கையை துணை அதிபர் மைக் பென்ஸ் மேற்கொள்ள வேண்டும் என்றும் அழுத்தம் தரப்படுகிறது.

இதுகுறித்து சபை உறுப்பினர்களுக்கு பெலோசி கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘நமது அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க நாம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். ஏனெனில் அதிபர் டிரம்ப்பால் இந்த  இரண்டு அம்சங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. டிரம்பை பதவி நீக்கம் செய்ய துணை அதிபர் மைக் பென்ஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிபரை பதவியில் இருந்து நீக்க துணை அதிபருக்கு அதிகாரம் உண்டு. துணை அதிபர் இதற்கான  நடவடிக்கையை 24 மணி நேரத்தில் எடுக்காவிட்டால், பிரதிநிதிகள் சபை மூலம் வாக்கெடுப்பு நடத்தி பதவி பறிப்பு தீர்மானம் கொண்டு வருவோம்’ என்று கூறியுள்ளார். 


Tags : US ,Vice President ,Speaker , Tension in US politics: Deadline for Vice President to remove Trump: Speaker Pelosi Action
× RELATED நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை..!!