×

அஷ்வின் - விஹாரி உறுதியான ஆட்டம்: சிட்னி டெஸ்ட் டிராவில் முடிந்தது: பன்ட் அதிரடியால் பரபரப்பு

சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. அடிலெய்டு, மெல்போர்னில் நடந்த டெஸ்டில் இரு அணிகளும் தலா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சமநிலை வகிக்க, 3வது டெஸ்ட்  சிட்னியில் கடந்த7ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த ஆஸி. முதல் இன்னிங்சில் 338 ரன் குவிக்க, அடுத்து களமிறங்கிய இந்தியா 244 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 94 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய  ஆஸி. 6 விக்கெட் இழப்புக்கு 312 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 407 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 4ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன் எடுத்திருந்தது.  புஜாரா 9, கேப்டன் ரகானே 4 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். ரகானே மேற்கொண்டு ரன் எடுக்காமல் வெளியேறினார்.

அடுத்து புஜாராவுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பன்ட் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த, ஆஸி. தரப்பு பதற்றமடைந்தது. பன்ட் 64 பந்தில் அரைசதம் விளாசினார். மறு முனையில் பொறுமையாக விளையாடிய புஜாரா 170 பந்தில்  அரைசதம் அடித்தார். பன்ட் 97 ரன் (117பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி லயன் சுழலில் கம்மின்ஸ் வசம் பிடிபட, ஆஸி. வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். புஜாரா - ரிஷப் இணை 4வது விக்கெட்டுக்கு 148 ரன் குவித்தது  குறிப்பிடத்தக்கது. கம்மின்ஸ் வீசிய 83வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசிய புஜாரா 77 ரன் எடுத்து (205பந்து, 12 பவுண்டரி) ஹேசல்வுட் வேகத்தில் கிளீன் போல்டானார். இந்தியா 88.2 ஓவரில் 5விக்கெட் இழப்புக்கு 272 ரன் எடுத்திருந்த  நிலையில், வெற்றிக்கு 135 ரன் தேவைப்பட்டது. முன்னணி பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பிவிட்டதால், ஹனுமா - அஷ்வின் ஜோடி 6வது விக்கெட்டுக்கு பொறுமையாகவும் பொறுப்பாகவும் விளையாடி ஆட்டத்தை டிராவை நோக்கி  நகர்த்தியது.

இந்த ஜோடியை பிரித்துவிட்டால் வெற்றி வசமாகிவிடும் என்ற முனைப்புடன் தாக்குதலை தீவிரப்படுத்திய ஆஸி. வீரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. படுநிதானமாக விளையாடிய ஹனுமா 100 பந்தில் 6 ரன் எடுத்து ஆஸி. வீரர்களை  வெறுப்பேற்றினார். அஷ்வின் அவ்வப்போது பவுண்டரி விளாசினாலும், விக்கெட்டை தக்கவைத்துக் கொள்வதில் மிக உறுதியாக இருந்தார். இதனால், இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன் எடுத்த நிலையில் (131 ஓவர்) ஆட்டம் டிரா ஆனது.  அஷ்வின் 39 ரன், (128 பந்து, 7பவுண்டரி), விகாரி 23 ரன்னுடன் (161 பந்து, 4 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இவர்கள் இருவரும் 6வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் கிட்டதட்ட 42 ஓவர்கள் விளையாடி 62 ரன் சேர்த்தனர்.  இவர்களின் பொறுப்பான ஆட்டம் வெற்றியை தராவிட்டாலும், தோல்வியில் இருந்து தப்பிக்கவும், டிரா செய்யவும் உதவியது. ஆஸி தரப்பில் நாதன் லயன், ஹேசல்வுட் தலா 2, கம்மின்ஸ் ஒரு விக்கெட் எடுத்தனர். ஆட்ட நாயகனாக ஸ்மித்  தேர்வு செய்யப்பட்டார்.

புஜாரா 6000
*  2 இன்னிங்சிலும் அரைசதம் விளாசிய புஜாரா நேற்று 47 ரன் எடுத்தபோது 6000 ரன்னை மைல் கல்லை எட்டினார்.
*  தேநீர் இடைவேளையின்போது 112 பந்தில் 7 ரன் எடுத்திருந்த விஹாரி, 1980ல் ஆஸி.க்கு எதிரான போட்டியில் யஷ்பால் சர்மா 157 பந்தில் 13 ரன் எடுத்த சாதனையை முறியடிப்பாரோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், கடைசி நேரத்தில் 4  பவுண்டரிகளை விளாசியதால் அந்த சோதனை! பட்டியலில் இருந்து விஹாரி தப்பித்தார்.
*  விக்கெட் கீப்பிங்கில் சற்று மந்தமாக செயல்பட்ட ரிஷப், 2வது இன்னிங்சில் தனது அதிரடி ஆட்டத்தால் அதை மறக்கடித்தார். 2வது இன்னிங்சில் அதிக ரன் குவித்த இந்திய விக்கெட் கீப்பர்கள் வரிசையில் முதல் 2 இடங்களும் ரிஷப் வசமாகி  உள்ளது. முன்னதாக அவர் 2018ல் இங்கிலாந்துக்கு எதிராக 114 ரன் விளாசி உள்ளார். டோனி 76* (இங்கிலாந்து, 2007), பார்தீவ் படேல் 67* (இங்கிலாந்து 2017) அடுத்த இடங்களில் உள்ளனர்.
*  இந்திய இணைகளில் 4வது விக்கெட்டுக்கு அதிக ரன் குவித்த சாதனை புஜாரா - ரிஷப் வசமாகியுள்ளது (148 ரன்). ருஷி மோடி - விஜய் ஹசாரோ (1948, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 139 ரன்), வெங்சர்க்கார் - யஷ்பால் (1979,  பாகிஸ்தானுக்கு எதிராக 122 ரன்) ஜோடிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன.

அதிசயம்... அற்புதம்... அஷ்வின்!
‘நேற்று இரவு அவர் கடுமையான முதுகு வலியுடன் தான் தூங்கச் சென்றார். காலையில் எழுந்தபோது நேராக நிற்கக் கூட முடியவில்லை. ஷூக்களின் லேஸை கட்டுவதற்காக குனிய முடியாமல் சிரமப்பட்டார். அப்படி இருந்தும், களத்தில் அவர்  வெளிப்படுத்திய உறுதியான ஆட்டம் என்னை பிரமிப்பில் ஆழ்த்திவிட்டது’ என்று அஷ்வினின் மனைவி பிரீத்தி ட்வீட் செய்தது ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.

கோஹ்லிக்கு பெண் குழந்தை
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி - நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதியருக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் கோஹ்லி. அவருக்கு கிரிக்கெட்  பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags : Sydney ,Punt Action , Ashwin - Vihari decisive match: Sydney Test draw ends: Punt in action Excitement
× RELATED மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸின் புதிய...