யாழ்ப்பாணத்தில் இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம்: அடிக்கல் நாட்டினார் பல்கலை. துணைவேந்தர்

கொழும்பு:  இலங்கை உள்நாட்டு போரில் ஏராளமான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட மே 18ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் இலங்கை அரசு வெற்றி நாளாக கொண்டாடி வரும்  நிலையில், அந்நாளை இலங்கை தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு நாளாக  அனுசரித்து வருகின்றனர். இந்த நினைவு நாளை போற்றும் வகையில் கடந்த 2019ம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் நினைவுச் சின்னம்  அமைக்கப்பட்டது.  இந்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு திடீரென முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிக்கப்பட்டது. இது  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், நினைவு சின்னம் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம்  பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களிடம் பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராஜா பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, மாணவர்களின் கோரிக்கை மற்றும் அரசின் கோரிக்கையை ஏற்று பல்கலைக்கழக வளாகத்தில் அரசின் அங்கீகாரத்துடன், மீண்டும் பழைய வடிவத்திலேயே நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என உறுதியளித்துள்ளார். அதன்படி,  மீண்டும் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைப்பதற்கன அடிக்கல்லை துணைவேந்தர் சற்குணராஜா நாட்டினார்.  இதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Related Stories:

>