கர்நாடகாவில் கார் விபத்து மத்திய அமைச்சர் படுகாயம்: மனைவி, உதவியாளர் பலி

பெங்களூரு: வட கர்நாடக மாநிலம் அங்கோலாவில் மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபத்நாயக் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் அவரது மனைவி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

கோவாவை சேர்ந்தவர் மத்திய அமைச்சர் ஸ்ரீபத்நாயக். பாஜவை சேர்ந்த இவர், மத்திய ஆயுஷ் அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். நேற்று மாலை கோவாவில் இருந்து வடகர்நாடக வழியாக கோகர்னாவில் உள்ள கோவிலுக்கு சாமி  தரிசனம் செய்வதற்காக காரில் குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்தார். வட கர்நாடக மாவட்டம் அங்கோலா போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஒசகம்பி கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று அமைச்சரின் கார்  கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. உடன் சென்ற பாதுகாவலர்கள், வாகனத்தில் இருந்த அனைவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அமைச்சரின் மனைவி விஜயா நாயக் மற்றும் உதவியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஸ்ரீபத் நாயக் உள்பட 3 பேரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயர் சிகிச்சைக்காக அமைச்சர் உள்பட 3  பேரும் கோவாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கோலா போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடந்திருப்பது உறுதியானது. இது குறித்து வழக்கு பதிவு  செய்துள்ள போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories:

>