×

திருவள்ளூர் செய்தி துளிகள்

வங்கி மேலாளர்  வீட்டில் கொள்ளை
ஆவடி: ஆவடி வசந்தம் நகர் குறிஞ்சி தெருவை சேர்ந்தவர் விஜய்(40). சென்னை கோபாலபுரத்தில் உள்ள இந்தியன் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 7ம் தேதி தாய் சரோஜா மற்றும் குடும்பத்தினருடன் திருநள்ளாறு  சனீஸ்வரன் கோயிலுக்கு சாமிகும்பிட சென்றார்.  நேற்று முன்தினம் அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடப்பது பார்த்து அக்கம் பக்கத்தினர் விஜய்க்கு போன் மூலம் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அவர் நேற்று வீட்டில் உள்ள  பீரோவை பார்த்தபோது 15 சவரன் நகைகள் மற்றும் ₹90 ஆயிரம் கொள்ளைபோனது தெரியவந்தது. தகவலறிந்த ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். பீரோ,  கதவுகளில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் ரேகைகளை பதிவு செய்தனர். மேலும், புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வாலிபர் தற்கொலை
திருவள்ளூர்: வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குண்டுமேடு கிராமத்தை சேர்ந்தவர் வேதாச்சலம். இவரது மூத்த மகன் பிரதாப்(22). இவர் 9ம் வகுப்பு வரை படித்துவிட்டு வேலையில்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார்.  பிரதாப் தனக்கு  கடை வைப்பதற்கு பணம் தருமாறு பெற்றோரிடம் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்துள்ளார். இதனால் வேதாச்சலம் தனது மனைவியுடன் கடந்த 6ம் தேதி மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு 3 நாட்கள் கழித்து அக்கம்  பக்கத்தில் வசிப்பவர்கள் வேதாச்சலத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உங்கள் மகன் வீட்டில் தூக்கில் தொங்குவதாக தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது பிரதாப் மின்விசிறியில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.  இதுகுறித்து வேதாச்சலம் வெள்ளவேடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் பிரதாப்பின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையுடன் மனைவி மாயம் போலீசில் கணவன் புகார்
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாள நகரை சேர்ந்தவர் சிவக்குமார்(33). தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நிர்மலா(23) என்ற மனைவியும், துர்கேஷ்(2) என்ற மகனும் உள்ளனர். கடந்த 8ம் தேதி இரவு  வேலைக்கு சென்று வீடு வந்து பார்த்தபோது, வீட்டில், தனது மனைவி நிர்மலா மற்றும் குழந்தை துர்கேஷ் காணாமல்போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பல இடங்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிவக்குமார் கொடுத்த புகாரின்பேரில் மணவாள நகர் போலீசார் வழக்குபதிந்து, அவர்களை யாராவது கடத்தி சென்றனரா அல்லது வேறு காரணமா  என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

வீட்டில் தூங்கிகொண்டிருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபுலியூர் கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரன்(65). இவரது மனைவி லட்சுமி(60). இவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது. திடீரென மர்ம நபர்கள்  கடப்பாரையால் வீட்டின் கதவை உடைத்து லட்சுமியின் கழுத்தில் கிடந்த 2 சவரன் தங்க சங்கிலி மற்றும் பணத்தை பறித்து சென்றனர். புகாரின்பேரில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும் கஜேந்திரனின்   பக்கத்து வீட்டிலும் மர்ம நபர்கள் கடப்பாரையால் கொள்ளையடிக்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. 


Tags : Tiruvallur News Drops , Bank manager home robbery
× RELATED திருவள்ளூர் செய்தி துளிகள்